Showing posts with label About Nanneri. Show all posts
Showing posts with label About Nanneri. Show all posts

Sunday, August 9, 2009

Nanneri - SivaPrakasa Swamigal

நன்னெறி

நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளை கூறும் நூல். ஆகவே நன்மை+நெறி=நன்னெறி என வழங்கப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து மட்டும் 2 அடி, ஏனையவை நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாக்களால் ஆனது. முதல் இரண்டடியில் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தும், அடுத்த இரண்டடிகளில் அதனை விளக்க வந்த உவமையும் கூறப்பட்டுள்ளன.

இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

கடவுள் வாழ்த்து

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!

நூல்

என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து. 1

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு. 2

தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கெள்ப கறந்து. 3

பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4

நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம். 5

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகாமம் செய்பவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண். 6

கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 7

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு? 8

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து. 9

தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று. 10

பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 11

வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு. 12

பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர். 13

தொலையாப் பெரும் செல்வத் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு. 14

இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு. 15

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல். 16

எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ-பைந்தோடீ!
நின்று பயன் உதவி நிற்பது அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி. 17

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல். 18

நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர. 19

பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண். 20

எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம்-எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை. 21

ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க-நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு. 22

பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பல்கால்
எறும்பு ஊரக் கல் குழியுமே! 23

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி. 24

கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள். 25

உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்-மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு. 26

கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று. 27

முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை. 28

உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான். 29

கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்!
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு. 30

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்!
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது. 31

பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான். 32

எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல். 33

அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு. 34

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம். 35

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர்-எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய். 36

பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் கொல்
பொன் உயர்வு தீர்த்த புனர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. 37

நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம். 38

கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம். 39

பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண். 40