Thursday, August 6, 2009

Agananuru (Full Collection) - Part I

1. களிற்றியாணை நிரை

0

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே ; மூவாய்

5


வேலும் உண்டு அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே ; சேர்ந்தோள் உமையே-
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
எரியகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை,

10


முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
வரிகிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ்கெழு மணிமிடற்று, அந்தணன்
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

15

1

வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய

5


கல்போற் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ - தோழி!-சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார்-நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்

10


நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம்புல் லென்ற ஆற்ற; அலங்கு சினை

15


நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலம் கடுவளி எடுப்ப, ஆருற்று,
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரோ?

19

2

கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது

5


கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய?

10


வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை; பைம்புதல்

15


வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே!

17




3

இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-

5


வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன்,
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின்- ஆனாது கவரும்

10


புல்லிலை மராஅத்த அகல்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா-
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்,

15


அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞா஡ன்றே?

18

4

முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப,

5


கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின் பெறு கானம்;
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

10


தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட்

15


போதவிழ் அலரின் நாறும்-
ஆய்தொடி அரிவை! - நின் மாணலம் படர்ந்தே.

17

5

அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளா அக்
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்

5


கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,

10


உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்

15


இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி

20


பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்

25


கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே

28

6

அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்-

5


கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழைமாண் ஒள்ளிழை நீ வெய் யோளொடு,
வேழ வெண்புணை தழீஇப், பூழியர்
கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு,
ஏந்தெழில் ஆகத்து பூந்தார் குழைய,

10


நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து
'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்,
மாசில் கற்பின், புதல்வன் தாய்' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!

15


சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து
அம்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்,
முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்

20


இளமை சென்று தவத்தொல் லஃதே;
இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? .

22

7

முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
தலைமுடி சான்று; தண்தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;

5


பேதை அல்லை - மேதையம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என,
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி,
தன்சிதைவு அறிதல் அஞ்சி-இன்சிலை
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!-

10


வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவில் வெள்வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந் தோளே; ஆயிடை,
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென,
பிற்படு பூசலின் வழிவழி ஓடி

15


மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை,
நின்னொடு வினவல் கேளாய்;- பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி,
ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்,
ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த

20


துய்த்தலை வெண்காழ் பெறூஉம்
கல்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.

22

8

ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைக்
தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்,
பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்ல-மன் இகுளை! 'பெரிய

5


கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப்
பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்,
படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப்

10


பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது,
மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால்

15


சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ
நெறிகெட விலக்கிய, நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.

18

9

கொல்வினைப் பொிந்த, கூர்ங்குறு புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்

5


உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்,
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்-

10


கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது,

15


துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்
எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்
ஓங்கிய நல்லில் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி,

20


கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே?

26

10

வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப்

5


பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்

10


மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே

13

11

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,

5


கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்

10


அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!

15

12

யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; 'சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;'
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;

5


ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்

10


புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே

14

13

தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
தெறல் அருமரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்

5


திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் -
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்-

10


பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்விது ஆயினும்- தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட

15


மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக- வள வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப்,

20


புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே!

24

14

'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத்,

5


திரி மருப்பு இரலை புல்அருந்து உகள,
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற

10


கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண!" என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக்

15


கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து,
அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே!

21

15

எம்வெங காமம் இயைவது ஆயின்,
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,

5


வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல-
தோழி மாரும் யானும் புலம்பச்,
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்

10


பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச்
செறிந்த காப்புஇகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
கொன்றை யம்சினைக் குழற்பழம் கொழுதி,

15


வன்கை எண்கின் வயநிரை பரக்கும்-
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக்,
குன்ற வேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற- ஆறே!

19

16

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்

5


தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து

10


கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என யான்தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா,

15


நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே!

19

17

வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந்துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என்மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும் மன்னே! இனியே,

5


தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
நொதும லாளன் நெஞ்சுஅறப் பெற்றஎன்
சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறுடி
வல்லகொல், செல்லத் தாமே- கல்லென-

10


ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின்,
நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த,
கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும்,
கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல்,

15


பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்,
நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி,

20


வைகுறு மீனின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே!

22

18

நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
மராஅ யானை மதம்தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்-

5


கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ?- ஓங்கல் வெற்ப!-
ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும்

10


ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
நீடுஇன்று ஆக இழுக்குவர், அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில்,

15


பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை
வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே.

18

19

அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
வருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து
உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்,

5


எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின்
சேயிதழ் அனைய ஆகிக், குவளை

10


மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை

15


பூவீழ் கொடியின் புல்லெனப் போகி;
அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

19

20

பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்

5


தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடுமணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல்பூங் கானல் அல்கினம் வருதல்

10


கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்,
கொடிதுஅறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடிகொண் டனளே- தோழி:- பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி,
நிலவு மணல் கொட்கும்ஓர் தேர் உண்டு எனவே!

16

21

'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
துணை நிரைத்தன்ன; மாவீழ் வெண்பல்,
அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ்மென் கூந்தல், தடமென் பணைத்தோள்
மடந்தை மாண்நலம் புலம்பச், சேய்நாட்டுச்

5


செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய்
வினைநயந்து அமைந்தனை ஆயினை ; மனைநகப்
பல்வேறு வெறுக்கை தருகம்- வல்லே,
எழுஇனி, வாழி என் நெஞ்சே!- புரி இணர்
மெல்அவிழ் அம்சினை புலம்ப; வல்லோன்

10


கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி
மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்,
சுரம்செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறுதலை ஓமை

15


இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட
மென்புனிற்று அம்பிணவு பசித்தெனப், பைங்கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலில், பரீஇச்
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின்

20


பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து,

25


இருங்களிற்று இனநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே .

27

22

அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை

5


நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,

10


முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரல் பல்பூ வண்டுபடச் சூடி,
களிற்று - இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல,

15


நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

21

23

மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்
காடே கம்மென் றன்றே; அவல,

5


கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவுநடை
அண்ணல்இரலை அமர்பிணை தழீஇத்,
தண்அறல் பருகித் தாழ்ந்துபட் டனவே;
அனையகொல் - வாழி, தோழி!- மனைய

10


தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும்
மௌவல். மாச்சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச்செய் பொருளே! .

13

24

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தலைபிணி அவிழா, சுரிமுகப் பகன்றை
சிதரல்அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்,

5


வயங்குகதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல்இடத்து ஒழுகி,
மங்குல் மாமழை, தென்புலம் படரும்
பனிஇருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம்ஊ ரோளே, நன்னுதல்; யாமே

10


கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து
நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச்,
சிறுகண் யானை நெடுநா ஒண் மணி,
கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை உதைப்பு,
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, .

15


கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள்,
இரவு துயில் மடிந்த தானை,
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே!

18

25

"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய,
அவிர்அறல் கொண்ட விரவுமணல் அகன்துறைத்
தண்கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,
வதுவை நாற்றம் புதுவது கஞல,

5


மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில்
படுநா விளியா னடுநின்று, அல்கலும்,
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்

10


பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன,
இகழுநர் இகழா இளநாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீநின்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
வாரா மையின் புலர்ந்த நெஞ்சமொடு,

15


நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி - தோழி - பொருநர்
செல்சமம் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்

20


இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரோ!

22

26

கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவுஅணி கூட்டும்
அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல்

5


பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று

10


இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடஇத்
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
நறுஞ் சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே

15


தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் ; இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம்' என, மெல்லஎன்

20


மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்
சிறுபுறம் கவையின னாக, உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து, அவன் கலுழ்ந்தே .
நெஞ்சுஅறை போகிய அறிவி னேற்கே?

26

27

"கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை
ஆடுகழை இருவெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம்அழ,
நின்றதுஇல் பொருட்பிணிச் சென்றுஇவண் தருமார்,
செல்ப" என்ப, என்போய்! நல்ல

5


மடவை மன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை,
மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்

10


தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே - தேம்படத்
தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா பருந்துபட
வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல்

15


குருதியொடு துயல்வந் தன்னநின்
அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கே?

17

28

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
கொய்யா முன்னும், குரல்வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே; நீயே,

5


முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி,
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள்விளி இடைஇடை பயிற்றி

10


ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள்' எனப்,
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே!

14

29

"தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள்,
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வுஇல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பப்
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று

5


இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
வாழலென் யான்" எனத் தேற்றிப், "பல்மாண்

10


தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள்இனி-
வெம்மை தண்டா எரிஉகு பறந்தலை,

15


கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது, தேர்மருங்கு ஓடி,
அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு

20


நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம்கெழு நெஞ்சம் நின் உழை யதுவே!

23

30

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை,
கடல்பாடு அழிய, இனமீன் முகந்து,
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்புஒய் உமணர் அருந்துறை போக்கும்

5


ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்,
பெருங்களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி,
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்

10


கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ - ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறுங் கானல் வந்து "நும்
வண்ணம் எவனோ?" என்றனிர் செலினே?

15

31

நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
புலங்கடை மடங்க தெறுதலின், ஞொள்கி,
"நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?" என
மன்உயிர் மடிந்த மழைமாறு அமையத்து,
இலைஇல ஓங்கிய நிலைஉயர் யாஅத்து

5


மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை அடூஉக் கழிந்தன்ன
புண்உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்

10


கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச்,
'சென்றார்' என்பு இலர் -தோழி!- வென்றியொடு
வில்இலைத்து உண்ணும் வல்ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே.

15

32

நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்,
சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன்மாண்

5


குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச்
'சூரர மகளிரின் நின்ற நீமற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர்உற்ற என்

10


உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல்
கடிய ூடு, கைபிணி விடாஅ
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என்உரத் தகைமையின் பெயர்த்து, பிறிதுஎன்வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே; அல்லாந்து,

51


இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை- தோழி! நாம் சென்மோ,
சாய்இறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசு இன் றாதலும் அறியான், ஏசற்று,
என்குறைப் புறனிலை முயலும்
அங்க ணாளனை நகுகம், யாமே!

21

33

வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி,
மனைமாண் கற்பின் வாணுதல் ஒழியக்,
கவைமுறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்றுஓங்கு உயர்சினை இருந்த வன்பறை,
வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்

5


வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும்
இளிதேர் தீங்குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவண்
மலர்பாடு ஆன்ற, மைஎழில், மழைக்கண்
தெளியா நோக்கம் உள்ளினை, உளிவாய்

10


வெம்பரல் அதர குன்றுபல நீந்தி,
யாமே எமியம்ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது
வெல்போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள்,

15


வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற்
பிரியாய் ஆயின் நன்றுமற் றில்ல.
அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
செய்வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ, பிறர்நகு பொருளோ?

20

34

சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறிஇலைப் பதவின் செங்கோல் மென்குரல்

5


மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம் பெறுந!-

10


பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என,

15


இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே!

18

35

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்-
தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த

5


வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம்

10


துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத், தன்
மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல-
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்துறை,

15


பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!

18

36

பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி,
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்

5


தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்,

10


நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினம்கெழு திதியன்,

15


போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்

20


முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக்,
கொன்று களம்வேட்ட ஞான்றை,
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

23



37

மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலிமகிழ் உழவர்
பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டித்

5


தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை
வளியொடு சினைஇய வண்தளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்துப்
புளிப்பதன் அமைந்த புதுக்குட மலிர்நிறை
வெயில்வெரிந் நிறுத்த பயில்இதழ்ப் பசுங்குடைக்,

10


கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக்
கொள்ளொடு பயறுபால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால்அவிழ் மிதவை
வாங்குகை தடுத்த பின்றை ஓங்கிய,
பருதிஅம் குப்பை சுற்றிப், பகல்செல,

15


மருத மரநிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே!

18

38

விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்,
தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்,
அம்சிலை இடவதுக, வெஞ் செலற்
கணைவலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி;
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன்,

5


வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்புஉடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி,
நீடுஇதழ் தலயிய கவின்பெறு நீலம்

10


கண்என மலர்ந்த சுனையும், வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப்பொறை யிறுத்த கோல்தலை மருவி
கொய்துஒழி புனமும், நோக்கி; நெடிதுநினைந்து,
பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ.தேங்கு -

15


'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக்
கூஉம் கணஃது எம்ஊர், என
ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின், யானே,

18

39

'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?" என, யாழநின்
முள்எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல ; நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே? சேண்இகந்து

5


ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி, நெடுநிலை
முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்,
அதர்கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு

10


மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனம்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு,
ஞான்று தோன்று அவிர்சுடர் மான்றால் பட்டெனக்,
கள்படர்ஓதி! நிற்படர்ந்து உள்ளி,
அருஞ்செலவு ஆற்றா ஆர்இடை, ஞெரேரெனப்

15


பரந்துபடு பாயல் நவ்வி பட்டென,
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு,
'இன்னகை! இனையம் ஆகவும், எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழநின்

20


கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி,
நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின், புலத்தியால் எம்மே!

25

40

கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப,
நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக் குடம்பை சேர,
அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்,

5


தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்துநம் அருளார் ஆயினும்-
அறா அ லியரோ அவருடைக் கேண்மை!

10


அளிஇன் மையின் அவண்உறை முனைஇ,
வாரற்க தில்ல - தோழி! - கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை

15


அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே!

17

41

வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,
கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, .

5


அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
கோழிணர் எதிரிய மரத்த கவினிக்,
காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்

10


நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளஇய,
நுண்பல் தித்தி, மாஅ யோளோ?

16

42

மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக்

5


கோடை நீடிய பைதுஅறு காலைக்
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை,

10


பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே!

14

43

கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி,

5


குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,
கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே
கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
மைஇருங் கானம் நாறும் நறுநுதல்,

10


பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர்தாமே - அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப் போகித், தம்
இன்துணைப் பிரியும் மடமை யோரே!

15

44

வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்
முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது

5


ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,

10


பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித் திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,

15


பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே!

19

45

வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்

5


காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரிநுண் பசலை பாஅய, பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி,

10


புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார்,

15


கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே!

19

46

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை

5


வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம்

10


கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ?

16

47

அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி

5


விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின்

10


குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
"யாண்டு உளர்கொல்?" எனக், கலிழ்வோள் எய்தி,
இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன்

15


மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய்புரை பணைத்தோள், பாயும்
நோய்அசா வீட, முயங்குகம் பலவே!

15

48

"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,
மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு

5


ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
"புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற-
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,

10


குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
"யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என
வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி

15


நாணி நின்றனெ மாகப், பேணி,
"ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,

20


நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன்
மகனே, தோழி!" என்றனள்
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.

26

49

'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என,
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,

5


குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி,

10


வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை
அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,

15


கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!

18



50

கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம்வயின் அகலா னாகிப்

5


பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
"வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது,
மல்லன் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ - பாண! 'எல்லி

10


மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே!

14

51

ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
நீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,
ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி

5


எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியின் புணர்வது ஆயிற், பிரியாது.

10


ஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை - மாண் நெஞ்சம்!- நீங்குதன் மறந்தே.

14



52

'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்

5


ஆகொள் வயப்புலி ஆகும் அஃது" எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக், கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்? அறியலெம் கொல்?' என

10


இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று - வாழி, தோழி!- 'யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செய்யா தீமே!

15

53

அறியாய், வாழி, தோழி! இருள்அற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை,

5


வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரிஅரை புதைத்த புலம்புகொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர்

10


எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.

16

54

விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற்
காரும் ஆர்கலி தலையின்று: தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்,
வள்வாய் ஆழி உள்உறுபு உருளக்,

5


கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
தாம்புஅசை குழவி வீங்குசுரை மடியக்,
கனையலம் குரல் காற்பரி பயிற்றிப்,
படுமணி மிடற்ற பயநிரை ஆயம்
கொடுமடி உடையர் கோற்கைக் கோவலர்

10


கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனைநகு மாலைத்,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

15


நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி,
வருகுவை ஆயின், தருகுவென் பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்

20


திதலை அல்குல்எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே!

22

55

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்,
ஈந்துகுருகு உருகும் என்றூழ் நீள்இடை,
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்,
விளிமுறை அறியா வேய்கரி கானம்,
வயக்களிற்று அன்ன காளையொடு என்மகள்

5


கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே! ஒழிந்துயாம்
ஊதுஉலைக் குருகின் உள்உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ - ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

10


பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வான்வடக் கிருந்தென,
இன்னா இன்உரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
பெரும்பிறிது ஆகி யாங்குப், பிரிந்து இவண்

15


காதல் வேண்டி, எற் றுறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே!

17

56

நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய

5


காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்

10


புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு,
எம்மனைப் புகுதந் தோனே; அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
'இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே.

16

57

சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
நெடுநீர் வானத்து, வாவுப்பறை நீந்தி
வெயில்அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறுநாள் யாணர் உள்ளிப், பையாந்து,
புகல்ஏக் கற்ற புல்லென் உலவைக்

5


குறுங்கால் இற்றிப் புன்தலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொரப்,
பெருங்கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள்இடை
யாமே எமியம் ஆகத், தாமே

10


பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச், சிறுபீர்
வீஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ-
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்

15


களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும்புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் - ஆய்சிறு நுதலே!

19

58

இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
காடுதேர் வேட்டத்து விளிவுஇடம் பெறாஅது,
வரிஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத்
தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,

5


கூதிர் இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப், பல்ஊழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்ற,
நின்மார்பு அடைதலின் இனிது ஆகின்றே-
நும்இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்

10


தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை
பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடி-
மனைமரம் ஒசிய ஒற்றிப்
பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே!

14

59

தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே!- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்

5


மரம்செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம்குழை,
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே- தோழி!
சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்,

10


சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம்பா ராட்டிய காலையும் உள்ளார்,

15


வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
அருஞ்செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே!

18

60

பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
கொடுந்தொழின் முகந்த செங்கோல் அவ்வலை
நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து,

5


கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி அன்னஎம்
ஒண்தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,

10


ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினுஞ் செறிய
அருங்கடிப் படுக்குவள், அறன்இல் யாயே

15

61

'நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர்' எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி!- தாழாது,

5


உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும்

10


கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி

15


பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே.

18

62

அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு

5


பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு பிரிந்து இசைப்பக்,
கரந்த கரப்பொடு நாஞ்செலற்கு, அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல,

10


நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந் தோளே - வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅ யோளே!

16

63

கேளாய் வாழியோ மகளை! நின் தோழி,
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு-
பெருமலை இறந்தது நோவேன்; நோவல்-
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி,
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி

5


பெரும்புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்.
கன்று காணாது, புன்கண்ண, செவிசாய்த்து

10


மன்றுநிறை பைதல் கூறப், பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லிின் அசைஇ,
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை,
மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை

15


தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல்?, எனக் கலுழும்என் நெஞ்சே!

19

64

களையும் இடனாற் - பாக! உளை அணி
உலகுகடப் பன்ன புள்இயற் கலிமா
வகைஅமை வனப்பின் வள்புநீ தெரியத்
தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி,
ஐதுஇலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ்

5


வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்,
செலவுநாம் அயர்ந்தனம் ஆயிற், பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின்,
விடுநெறி ஈர்மணல், வாரணம் சிதரப்,
பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி,

10


மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன்நிலை வேட்கையின் மடநாகு தழீஇ,
ஊர்வயிற் பெயரும் பொழுதிற், சேர்புஉடன்,
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
ஆபூண் தெண்மணி ஐதுஇயம்பு இன்இசை

15


புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

17

65

உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம்சேரா இயல்பிற் பொய்ம் மொழிச்
சேரிஅம் பெண்டிர் சௌவையும் ஒழிகம்;
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்

5


பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி - வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி,

10


மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்,
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக்,

15


காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், 'பணைத்தோள்,
நாறுஐங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு
அரியவால்' என அழுங்கிய செலவே!

20

66

'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

5


வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி!
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்
மாண்தொழில் மாமணி கறங்கக், கடை கழிந்து

10


காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும! செல்இனி, அகத்து' எனக்

15


கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
கலக்கினன் போலும், இக்கொடியோன்' எனச்சென்று

20



அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந்து இசைப்பவும், தவிரான்
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்த தன் மணனே!

26

67

யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலிற், பறைபு உடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை;
அரம்போழ் நுதிய வாளி அம்பின்

5


நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்

10


வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,
'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு

15


நிலம்படு மின்மினி போலப் பலஉடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே!

18

68

'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தணஅயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை

5


ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும், அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள்; அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால் பொழுதே ; காதலர் .

10


வருவர் ஆயின், பருவம்இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் - வாழி, தோழி!- அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்

15


தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடிப் பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடு சுரனே.

21

69

ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த்
தகை வனப்புஇழந்த கண்ணும், வகைஇல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே; உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்

5


செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப்
பராரை நெல்லி அம்புளித் திரள்காய்
கான மடமரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்

10


பொன்புனை திகிரி திரிதர குறைத்த
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், எனையதூஉம்
நீடலர் - வாழி, தோழி! - ஆடுஇயல்
மடமயில் ஒழித்த பீலிவார்ந்து, தம்
சிலைமாண் வல்வில் சுற்றிப், பலமாண்

15


அம்புடைக் கையர் அரண்பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரின் நாறும்நின்
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே.

20

70

கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

5


அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வீ ஞ்஡ழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்

10


பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

15


பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே.

17

71

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின் பற்றுவிட்டு, ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப்பூ நீத்துச், சினைப்பூப் படர,
மைஇல் மான்இனம் மருளப், பையென

5


வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈனப்,
பகல்ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,

10


ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச்
கூர்எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள்அற இயற்றிய அழல்காண் மண்டிலத்து
உள்ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் - பெரிது அழிந்து,

15


இதுகொல் - வாழி, தோழி! என் உயிர்
விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

18

72

இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்,
மின்னி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக்,
குரும்பி, கெண்டும் பெருங்கை ஏற்றை

5


இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அருமர பினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க,
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,

10


ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர்உயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்

15


வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறுநெறி,
அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்

20


ஆனா அரும்படர் செய்த
யானே, தோழி, தவறுஉடை யேனே!

22

73

பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ;
வெருகுஇருள் நோக்கி யன்ன கதிர் விடுபு
ஒருகாழ் முத்தம் இடைமுலை விளங்க,
அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய்,

5


நின்நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என்ஆகுவள்கொல், அளியள் தான்?' என,
என்அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி
இருவேம் நம்படர் தீர வருவது

10


காணிய வம்மோ - காதல்அம் தோழி!
கொடிபிணங்கு அரில இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி

15


விடுபொறிச் சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

17

74

வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,
தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப்,

5


பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
வெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,
வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,
கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை
மருண்டமான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து

10


"திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
நின்வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற்

15


கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே!

17

75

"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள்அல் காட்சியின்
மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை,

5


அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர்
தொன்றுஇயல் சிறுகுடி மன்றுநிழற் படுக்கும்
அண்ணல் நெடுவரை, ஆம்அறப் புலர்ந்த
கல்நெறிப் படர்குவர் ஆயின் - நல்நுதல்,
செயிர்தீர் கொள்கை, சில்மொழி துவர்வாய்,

10


அவிர்தொடிய முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்,

15


தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?, என-
மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
அம்மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல்காசு நிரைத்த, கோடுஏந்து, அல்குல்;
மெல்இயல் குறுமகள்!- புலந்துபல கூறி

20


ஆனா நோலை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ ,
அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே?"

23

76

மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்,
தண்துறை ஊரன் எம்சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நல்கலம் ஈயும் நாள்மகிழ் இருக்கை
அவைபுகு பொருநர் பறையின், ஆனாது,

5


கழறுப என்ப, அவன் பெண்டிர்; அந்தில்
கச்சினன், கழலினன், தேம்தார் மார்பினன்
வகைஅமைப் பொலிந்த, வனப்பு அமை தெரியல்,
சுரியல்அம் பொருநனைக் காண்டிரோ?' என,
ஆதி மந்தி பேதுற்று இனைய,

10


சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம்தண் காவிரி போல,
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின், யானே!

13

77

'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன்அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சு!- வெய்துற
இடிஉமிழ் வானம் நீங்கி, யாங்கணும்

5


குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்,
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
உயிர்திறம் பெயர, நல்அமர்க் கடந்த
தறுக ணாளர் குடர் தரீஇத் தெறுவச்,

10


செஞ்செவி எருவை, அஞ்சுவர இருக்கும்
கல்அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு நீழல்
எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக்கை,

15


ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே!

19

78

'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம்தலைத் தரூஉம் எறுழ்கிளர் முன்பின்,
வரிஞிமிறு ஆர்க்கும், வாய்புகு கடாஅத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில், ஏமுறத் தழுவ,

5


கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்,
தேம்பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய்மலர் உதிரக், காந்தள்
நீடுஇதழ் நெடுந்துடுப்பு ஒசியத், தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,

10


நம்இல் புலம்பின், நம் ஊர்த் தமியர்
என்ஆ குவர்கொல் அளியர் தாம்?' என
எம்விட்டு அகன்ற சின்னாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ - ஓங்குமலை நாட!
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்இசை

15


வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டுபல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள்இடூஉக் கடந்து, வாள்அமர் உழக்கி,

20


ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய
நெடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் - இவள் நுதலோ?

24

79

தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து
கல்லுறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர்

5


படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர

10


வருந்தினை - வாழி என் நெஞ்சே!- இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள்இடை,

15


கல்பிறங்கு அத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே!

17

80

கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி இட்டுச்சுரம் நீந்தி, இரவின்
வந்தோய் மன்ற - தண்கடற் சேர்ப்ப !-
நினக்குஎவன் அரியமோ, யாமே? எந்தை
புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த

5


பல்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பன் மலரக் கவட்டுஇலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப
இனமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,

10


மின்இலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்
தண்நறும் பைந்தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல்வந் தீமே!

13

81

நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
அரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும்

5


மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள
எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த

10


செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ-
ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே?

13

82

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆக,
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றூம்பொடு

5


மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்!

10


உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோ ர்
பலர்தில், வாழி - தோழி - அவருள்,

15


ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

18

83

வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து,

5


பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்

10


சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே!

14

84

மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை-

5


நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்
சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே,

10


எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
அரிஞ்ர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங்கு ஆர்எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து,

15


வினைவயின் பெயர்க்குந் தானைப்,
புனைதார், வேந்தன் பாசறை யேமே!

17

85

நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்' எனப் பலபுலந்து
ஆழல் - வாழி, தோழி!- 'சாரல்,

5


ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;
நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை

10


நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம் காண் அது; பாயின்றால் மழையே.

15

86

உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,

5


கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,

10


புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக'- என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி

15


பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல்,

20


கொடும்புறம் வளஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என.

25


இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்-
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே - மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே.

31

87

தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்ித் தங்கிக்,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்

5


தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட்பாணி,
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்,
குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம்,

10


நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,
தாழ்இருங் கூந்தல்நம் காதலி
நீள்அமை வனப்பின் தோளுமார் அணைந்தே!

16

88

முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய

5


நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே - குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம்

10


இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
இருங்கல் விடர்அளை அசுணம் ஓர்க்கும்
காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்,
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே?

15

89

தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,
உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை,
உருத்துஎழு குரல குடிஞைச் சேவல்,
புல்சாய் விடரகம் புலம்ப, வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்,

5


சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
களரி பரந்த கல்நெடு மருங்கின்,
விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர்

10


மைபடு திண்தோள் மலிர வாட்டிப்,
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பில், துடிஇகுத்து
அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர்,

15


விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும்
கொல்லை இரும்புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே - தேம்பெய்து
அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள்,

20


இடுமணற் பந்தருள் இயலும்,
நெடுமென் பணைத்தோள், மாஅ யோளே?

22

90

மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள்

5


வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,

10


இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
'உறும்' எனக் கொள்குநர் அல்லர்-
நறுநுதல் அரிவை பாசிலை விலையே!

14

91

விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளம்கெழு மாமலை பயம்கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங்கண் யானை

5


ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய்கண் உடைந்த வெயில்அவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும்பேர் அன்பினர் - தோழி!- இருங்கேழ்
இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக்

10


கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை முனையின்,

15


முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின் மாண்நலம் மறந்தே!

18

92

நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக், கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! நேர்இறை

5


நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை,

10


உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை-
இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே!

13

93

கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்,
கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன

5


பெறல்அரு நல்கலம் எய்தி நாடும்
செயல்அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்
அரண்பல கடந்த, முரண்கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும் நறுநுதல்

10


நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப,

15


முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும் வாய்புகு கடாஅத்து ,
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்,
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை

20


திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும் பலவே!

23

94

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவைஇலை முசுண்டை வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,

5


வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும் கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய,
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்

10


கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டுநாட் டதுவே - அன்புகலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல், திருந்திழை ஊரே!

14

95

பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐதுஆ கின்று, என் தளிர்புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்;
உயிர்கொடு கழியின் அல்லதை; நினையின்
எவனோ?- வாழி, தோழி!- பொரிகாற்

5


பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலிஒப்பின் தூம்புடைத் திரள்வீ,
ஆறுசெல் வம்பலர் நீள்இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,

10


கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம்என், இதற்படலே?

15

96

நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்,
பூட்டுஅறு வில்லிற் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல்அடை துடக்கி,

5


அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசைவாங்கு தோலின், வீஞ்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ நயந்து
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்'; அதுவே-

10


செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய,

15


ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை,
களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே!

18

97

'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து,
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
இரவுக்குறும்பு அலற நூறி, நிரைபகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்

5


கொலைவில் ஆடவர் போலப், பலவுடன்
பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு

10


அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி,
நறவுமகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை ஆகம் புலம்பப் பல நினைந்து,
ஆழேல், என்றி - தோழி! யாழ என்

15


கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்
அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரைத்
துறைஅணி மருத தொகல்கொள ஓங்கிக்,
கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து

20


இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர,
நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே?

23

98

பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்
துனிஇல் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல்

5


அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து

10


ஓவத் தன்ன வினைபுனை நல்இல்
'பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடுகொள் இன்இயம் கறங்கக், களன் இழைத்து,
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்,

15


வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக், கைபெயராச்,
செல்வன் பெரும்பெயர் ஏத்தி, வேலன்
வெறிஅயர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறிஅமை பாவையிற் றூங்கல் வேண்டின்,

20


எ ன்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய
மையற் பெண்டிற்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையிற் சிறவாது ஆயின், இம்மறை
அலர்ஆ காமையோ அரிதே, அஃதான்று,

25


அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே!

30

99

வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை

5


அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம,

10


கண்டிசின வாழியோ - குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ!

14

100

அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல்லகம் வடுக்கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே!
பெருந்திரை முழக்கமொடு இயக்குஅவிந் திருந்த

5


கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடுஇயல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்

10


பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்,
பரியுடை நற்றோர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானற் புறந்தை முன்துறை
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய - தண்புலர்

15


வைகுறு விடியற் போகிய எருமை
நெய்தல்அம் புதுமலர் மாந்தும்
கைதைஅம் படப்பைஎம் அழுங்கல் ஊரே!

18

101

அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்

5


வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,
நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

10


இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்
புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர்,

15


தண்கார் ஆலியின், தாவன உதிரும்,
பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,
முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே!

18

102

உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி

5


பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் வரிஞிமிறு ஆர்ப்பத்,

10


தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப், பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்குபடர் அகலம் முயங்கித், தோள்மணந்து
இன்சொல் அளைஇப், பெயர்ந்தனன் - தோழி!-

15


இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன்
நல்கா மையின் அம்பல் ஆகி,
ஒருங்குவந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற் பசப்பே!

19

103

நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்கு செந்நாவின்,
விதிர்த்த போலும் அம்நுண் பல்பொறிக்,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளிஅரில் புலம்பப் போகி, முனாஅது

5


முரம்பு அடைந் திருந்த மூரி மன்றத்து,
அதர்பார்த்து அல்கும் ஆகெழு சிறுகுடி
உறையுநர் போகிய ஓங்குநிலை வியன்மலை ;
இறைநிழல் ஒருசிறைப் புலம்புஅயா உயிர்க்கும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித், தம்வயின்

10


ஈண்டுவினை மருங்கின் மீண்டோ ர் மன்என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசி னோரோ?

1 5

104

வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்து
இனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்புவலித்து ஊரின் அல்லது, முள்உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா

5


நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப்; புதல
பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி,
மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய,

10


புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும்
சீறூர் பலபிறக்கு ஒழிய, மாலை
இனிதுசெய் தனையால் - எந்தை! வாழிய!-
பனிவார் கண்ணள் பலபுலந்து உறையும்

15


ஆய்தொடி அரிவை கூந்தற்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே!

17

105

அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
ஒள்இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே - தேம்பெய்து,
மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி,

5


ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்
சில்பரிக் குதிரை, பல்வேல் எழினி

10


கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனைஎரி நடந்த கல்காய் கானத்து
வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து
வீங்குமென் சுரைய ஏற்றினம் தரூஉம்

15


முகைதலை திறந்த வேனிற்
பகைதலை மணந்த பல்அதர்ச் செலவே?

17

106

எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்,
பொரிஅகைந் தன்ன பொங்குபல் சிறுமீன்,
வெறிகொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை

5


நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது
செய்யாம் ஆயினும் உய்யா மையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசிச், சிறிதுஅவண்
உலமந்து வருகம் சென்மோ - தோழி!-
ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன்

10


வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமை கண்ணின் அலைஇயர், தன் வயிறே!

13

107

நீசெலவு அயரக் கேட்டொறும், பலநினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என்அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங்கல் வியல்அறை கிடப்பி, வயிறுதின்று
இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்

5


நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன்நிலைப் பள்ளி அளைசெய்து அட்ட
வால்நிணம் உருக்கிய வாஅல் வெண்சோறு
புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும்

10


கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்
வல்லாண் அருமுனை நீந்தி, அல்லாந்து,
உகுமண்ஊறு அஞ்சும் ஒருகாற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒருதனித்து ஒழிந்த உரனுடை நோன்பகடு

15


அம்குழை இருப்பை அறைவாய் வான்புழல்
புல்உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரைகடிந்து ஊட்டும் வரையகச் சீறூர்
மாலை இன்துணை ஆகிக், காலைப்
பசுநனை நறுவீப் பரூஉப்பரல் உறைப்ப,

20


மணமனை கமழும் கானம்
துணைஈர் ஓதிஎன் தோழியும் வருமே!

22

108

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று மன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதற் சிதறிய வைபோல், யானைப்
புகர்முகம் பொருத புதுநீர் ஆலி
பளிங்குசொரி வதுபோற் பாறை வரிப்பக்,

5


கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி,
படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர்உயிர்த் துப்பின் கோள்மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்

10


அருளான் - வாழி தோழி!- அல்கல்
விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோற்,
காயா மென்சினை தோய நீடிப்
பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள்

15


அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
கைஆடு வட்டின் தோன்றும்
மைஆடு சென்னிய மலைகிழ வோனே!

18

109

பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ்
நரம்புஇசைத் தன்ன இன்தீம் கிளவி,
நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே-
கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடுகால் யாத்த நீடுமரச் சோலை

5


விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை;
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,

10


கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு
இன்உயிர் செகாஅர் விட்டுஅகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன்இல் வேந்தன் ஆளும்
வறன்உறு குன்றம் பலவிலங் கினவே.

15

110

அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிதுஒன்று இன்மை அறியக் கூறிக்,
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்,
கடுஞ்சூள் தருகுவன், நினக்கே; கானல்

5


தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தன மாக எய்த வந்து
'தடமென் பணைத்தோள் மடநல் லீரோ!

10


எல்லும் எல்லின்று; அசைவுமிக உடையேன்;
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற்று எவனோ?'
எனமொழிந் தனனே ஒருவன்; அவற்கண்டு,
இறைஞ்சிய முகத்தேம் புறம்சேர்பு பொருந்தி,

15


'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழுமீன் வல்சி' என்றனம்; இழுமென
'நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோர் ருள்ளும்

20


என்னே குறித்த நோக்கமொடு 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி,
நின்றோன் போலும் இன்றும்என் கட்கே!

25

111

உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச்சொல் நாணி
வருவர் - வாழி, தோழி!- அரச
யானை கொண்ட துகிற்கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி

5


ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழைஎன மருண்ட மம்மர் பலஉடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற்கோள்

10


செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக்,
குருதி ஆரும் எருவைச் செஞ்செவி,
மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின், தோன்றும்
விண்தோய் பிறங்கல் லைஇறந் தோரோ!

15

112

கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
இரைநசைப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்றுஅணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி

5


ஒளிறுஏந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும்
பனிஇருஞ் சோலை எமியம் என்னாய்
தீங்குசெய் தனையே, ஈங்குவந் தோயே;
நாள்இடைப் படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;

10


கழியக் காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ?- வான்தோய் வெற்ப!-
கணக்கலை இகுக்கும் கறிஇவர் சிலம்பின்
மணப்புஅருங் காமம் புணர்ந்தமை அறியார்,

15


தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப்
பெண்கோள் ஒழுக்கம் கண்கொள் நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புதுநாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே!

19

113

நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியிற்,
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர்

5


இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம்கெழு நன்னாடு அன்னஎன் தோள்மணந்து,
அழுங்கன் மூதூர் அலர்எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல்பொரூஉ மெலியாப் பாடின் நோன்அடியன்

10


அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர்
இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பிற்
குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும்
கனைஇருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்

15


விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்,
நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
அறுதுறை அயிர்மணற் படுகரைப் போகிச்,

20


சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் - பராரை
அலங்கல் அம்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு,

25


மெய்இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற் செலீஇயர், என் உயிரே!

27

114

கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
அரவுநுங்கு மதியின், ஐயென மறையும்

5


சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என
நம்புலந்து உறையும் எவ்வம், நீங்க
நூல்அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர்

10


வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,
அரிமதர் மழைக்கண், அமைபுரை பணைத்தோள்,
அணங்குசால், அரிவையைக் காண்குவம்-
பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே!

16

115

அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும், பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர், வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன்

5


ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய்இல ராக, நம் காதலர் - வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன, ஒள்இணர்ச்

10


சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை,
சினம்மிகு முன்பின், வாமான், அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை

15


நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின், நீடி யோரே!

18

116

எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்,
ஆய்கடும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
பெரிய நாண்இலை மன்ற; பொரிஎனப்

5


புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய, ஒள்நுதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கின், காழ்இயன் வனமுலை,
எஃகுடை எழில்நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,

10


பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும் கையிகந்து
அலர்ஆ கின்றால் தானே; மலர் தார்,
மையணி யானை, மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர்

15


கடன்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழியப், பரந்துஅவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடுகொள் வியன்களத்து ஆர்ப்பினும் பெரிதே!

19

117

மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்,
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர்வினை
வளம்கெழு திருநகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வரக்,

5


கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப்
பருந்து பெடைபயிரும் பாழ்நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச், சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்றஎன் மகட்கே-
சாந்துஉளர் வணர்குரல் வாரி, வகைவகுத்து

10


யான்போது துணைப்பத், தகரம் மண்ணாள்,
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்-
நெடுங்கால் மாஅத்து ஊழுறு வெண்பழம்

15


கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம்நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? .

19

118

கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேங்கமழ் இணர வேங்கை சூடித்,
தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல்முருகு ஒப்பினை, வயநாய் பிற்பட

5


பகல்வரின் கவ்வை அஞ்சுதும்; இகல்கொள,
இரும்பிடி கன்றொடு விரைஇய கயவாய்ப்,
பெருங்கை யானைக் கோள்பிழைத்து, இரீஇய
அடுபுலி வழங்கும் ஆர்இருள் நடுநாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்;

10


என்ஆ குவள்கொல் தானே? பல்நாள்
புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளிகடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள் தான்,நின் அளி அலது இலளே!

14

119

'நுதலும், தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும் வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவுநன்று' என்னாது அகலினும், அவர் - வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை,

5


ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும் அத்தம்; வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது என்னாது, உரஞ்சிறந்து,

10


நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத்,
தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை,
மடைஅமை திண்சுரை, மரக்காழ் வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே - துணிகொள

15


மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல் ஆறே!

20

120

நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப,
எல்லை பைப்பய கழிப்பிக், குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு -

5


மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது
அழல்தொடங் கினளே - பெரும;- அதனால்
கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி

10


நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ,
வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே!

No comments:

Post a Comment