Saturday, August 8, 2009

Kamba Ramayanam (Full Version), Bala Kandam Part V

பால காண்டம் (தொடர்ச்சி)

http://ondemand.erosentertainment.com/img/product/bigger/ondemnd_1.jpg
21. உலாவியற் படலம்

இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள்

மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும்
மீன் இனம் மிளிர வானில் மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப, சிலம்பு இனம் புலம்பி ஏங்க,-
பூ நனை கூந்தல் மாதர் - பொம்மெனப் புகுந்து, மொய்த்தார். 1

விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத் தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு, 'நீங்குமின், நீங்குமின்' என்று, -
அருங் கலம் அனைய மாதர் - தேன் நுகர் அளியின் மொய்த்தார். 2

பள்ளத்துப் பாயும் நல் நீர் அனையவர், பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப, மென் பூத்
தள்ள, தம் இடைகள் நோவ, தமை வலித்து, 'அவன்பால் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம்' என்று, ஓடுகின்றாரும் ஒத்தார். 3

'கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்; இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும்' என்பார்;
மண்ணின் நீர் உலந்து, வானம் மழை அற வறந்த காலத்து,
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார். 4

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடந் தோளும், காண, மறுகினில் வீழும் மாதர்,
இரைத்து வந்து, அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம் என்னல் ஆனார். 5


இராமன் விளைத்த மையல்

வீதிவாய்ச் செல்கின்றான்போல், விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவும் மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர், தன்னை, 'யாவர்க்கும் கண்ணன்' என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திவிட்டான். 6

'எண் கடந்து, அலகு இலாது, இன்று, ஏகுறும் இவன் தேர்' என்று,
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை,
மண் கடந்து, அமரர் வைகும் வான் கடந்தானை, தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண்!' 7

பயிர் ஒன்று கலையும், சங்கும், பழிப்ப அரு நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும், சிந்தையும், உணர்வும் தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும், மடனும், தன் நிறையும், மற்றும்
உயிர் ஒன்றும், ஒழிய எல்லாம் உகுத்து, ஒரு தெரிவை நின்றாள். 8

குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த,
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறாப் புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி, நின்றாள். 9

பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்,
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால். 10

மாந் தளிர் மேனியாள் ஓர் வாணுதல், மதனன், எங்கும்
பூந் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி,
'வேந்தர் கோன் ஆணை நோக்கான்; வீரன் வில் ஆண்மை பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன்?' என்றாள். 11

சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் -
பொன்னையும் பொருவு நீராள், புனைந்தன எல்லாம் போக,
தன்னையும் தாங்கலாதாள், துகில் ஒன்றும் தாங்கி நின்றாள். 12

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர, பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம் சோர, ஓர் தோகை நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள் -
மற்று ஒன்றும் காண்கிலாதாள், 'தமியனோ வள்ளல்?' என்றாள். 13

பைக் கருங் கூந்தல், செவ் வாய், வாள் நுதல், ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், 'நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன்; போகாவண்ணம், கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி' என்றாள். 14

தாக்கு அணங்கு அனைய மேனி, தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும் வேறு வேறு ஆனது ஓராள்; -
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி - ஆண்டு, அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள். 15

களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு உள் ஊறி
வெளுப்பன, கறுப்ப, ஆன வேல்கணாள் ஒருத்தி, உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடு கோயில் புக்காள். 16

கருங் குழல் பாரம், வார் கொள் கன முலை, கலை சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந் தடங் கண்ணி, காணும் பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகளூடே, வள்ளலை நோக்குகின்றாள். 17


இராமன் உலாவந்த வீதிகளின் நிலை

வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப, மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூந் தொடையும், அன்றி வெள்ளிடை அரிது - அவ் வீதி. 18

இராமனின் மேனி அழகு

தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். 19

இராமனைக் கண்ட பற்பல மகளிரின் நிலைகள்

அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை,
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட,
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்,
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள். 20

அருப்பு மென் முலையாள், அங்கு, ஓர் ஆயிழை,
'இருப்பு நெஞ்சினையேனும், ஓர் ஏழைக்கா,
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா' என்றாள். 21

மை தவழ்ந்த கருங் கண் ஒர் வாணுதல்,
'செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு,
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்கொல்? கனவுகொலோ?' என்றாள். 22

மாது ஒருத்தி, மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள், இன் உயிர் சோர்கின்றாள்,
'போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ?' என்றாள். 23

பழுது இலா ஒரு பாவை அன்னாள், பதைத்து,
அழுது, வெய்துயிர்த்து, அன்புடைத் தோழியைத்
தொழுது, சோர்ந்து அயர்வாள், 'இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல், இம் மன்மதனால்?' என்றாள். 24

வண்ண வாய் ஒரு வாணுதல், 'மானிடற்கு,
எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? ஒன்று உணர்த்துகின்றேன், இவன்
கண்ணனே! இது கண்டிடும், பின்' என்றாள். 25

கனக நூபுரம் கை வளையோடு உக,
மனம் நெகும்படி வாடி, ஓர் வாணுதல்,
'அனகன் இந் நகர் எய்தியது, ஆதியில்,
சனகன் செய்த தவப் பயனால்' என்றாள். 26

நனி வருந்தி, நலம் குடிபோயிட,
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்,
'முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற,
தனி வரும்கொல் கனவின் தலை?' என்றாள். 27

புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான்,
மனங்கள் போல, முகமும் மறைக்குமே? 28

இணை நெடுங் கண் ஓர் இந்து முகத்தி பூ-
அணை அடைந்து, இடியுண்ட அரா என,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க, உயிர்த்தனள் ஆவியே. 29

ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்,
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்,
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல், சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே? 30

'வேர்த்து, மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,
தீர்த்தன், இத்தனை, சிந்தையின், செங் கணின்,
பார்த்திலான்; உள் பரிவு இலனோ?' என்றாள். 31

வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான். 32

நான வார் குழல் நாரியரோடு அலால்,
வேனில் வேளொடு, மேல் உறைவார்களோடு,
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே. 33

'மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!' என்றாள். 34

தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,
'உய்யும், உய்யும்!' எனத் தளர்ந்து ஓய்வுற்றாள். 35

பூக ஊசல் புரிபவர்போல், ஒரு
பாகின் மென்மொழி, தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர, சேவகன் தேரின்பின்,
ஏகும், மீளும்; இது என் செய்தவாறு அரோ? 36

பெருத்த காதலின் பேதுறு மாதரின்
ஒருத்தி, மற்று அங்கு ஒருத்தியை நோக்கி, 'என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ ?' என்றாள் -
அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ? 37

நங்கை, அங்கு ஒரு பொன், 'நயந்தார் உய்ய,
தங்கள் இன் உயிரும் கொடுத்தார், தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண், எங்கண் விளைந்தது, இவற்கு? என்றாள். 38

நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்,
'சேமத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று, கல்வியினால்' என்றாள். 39

ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
சோர, இன் உயிர் சோரும் ஒர் சோர்குழல்,
'கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?' என்றாள். 40

வசிட்டனும் கோசிகனும் இருந்த மண்டபத்தை இராமன் சேர்தல்

மாதர் இன்னணம் எய்த்திட, வள்ளல் போய்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான். 41

முனிவரை வணங்கி இராமன் ஆசனத்து அமர்தல்

திருவின் நாயகன், மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர,
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து,
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். 42

இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர்; ஏவ, ஓர்
நிறைஞ்ச பூந் தவிசு ஏறி, நிழல்கள்போல்,
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான் அரோ -
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான். 43


தயரதனும் மண்டபம் வந்து அமர்தல்

ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர, வெண்மதி,
வான் நிலா உற வந்தது மானவே. 44

வந்து, மா தவர் பாதம் வணங்கி, மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட,
அந்தணாளர்கள் ஆசியொடு, ஆதனம்,
இந்திரன் முகம் நாணுற, ஏறினான். 45

கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
சிங்களாதிபர், சேரலர், தென்னவர்,
அங்க ராசர், குலிந்தர், அவந்திகர்,
வங்கர், மாளவர், சோளர் மராடரே, 46

மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,
சீனர், தெங்கணர், செஞ் சகர், சோமகர்,
சோனகேசர், துருக்கர், குருக்களே, 47

ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
சேதி ராசர், தெலுங்கர், கருநடர்,
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார். 48


மங்கையர் சாமரை வீசுதலும், பல்லாண்டு கூறுதலும்

தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை, மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து, உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே. 49

சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்,
குழலினோடு உற, கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு மலிந்தவே. 50

வெண்குடை விளங்கிய காட்சி

வெங் கண் ஆனையினான் தனி வெண்குடை,
திங்கள், தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து, அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே. 51


தயரதன் படைப் பெருக்கம்

ஊடு பேர்விடம் இன்றி, ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்,
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம், ஒரு நல் நகர் ஆயதே. 52


சனகனின் உபசரிப்பு

ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர, பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின், அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே. 53


மிகைப் பாடல்கள்

தையல், சிற்றிடையாள், ஒரு தாழ்குழல்,
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் -
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே? 19-1

22. கோலம் காண் படலம்

சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல்

தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன உவந்த , அரசு இருந்தகாலை,
தா இல் வெண் கவிகைச் செங்கோல் சனகனை இனிது நோக்கி,
'மா இயல் நோக்கினாளைக் கொணர்க!' என, வசிட்டன் சொன்னான். 1

சனகன் ஏவிய மாதர் சென்று, சீதையின் தாதியர்க்குச் செய்தி அறிவித்தல்

உரை செய, தொழுத கையன், உவந்த உள்ளத்தன், 'பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு' என்று, ஆயிழையவரை ஏவ,
கரை செயற்கு அரிய காதல் கடாவிட, கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார், பேதை தாதியரில் சொன்னார். 2


தாதியர் சீதைக்கு அழகு செய்தல்

அமிழ் இமைத் துணைகள், கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல்,
உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார் -
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ! 3

கண்ணன் தன் நிறம், தன் உள்ளக் கருத்தினை நிறைத்து, மீதிட்டு,
உள்நின்றும் கொடிகள் ஓடி, உலகு எங்கும் பரந்ததன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து, மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின், மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார். 4

விதியது வகையால் வான மீன் இனம் பிறையை வந்து
கதுவுறுகின்றதென்னக் கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பதென்ன,
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார். 5

'வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர, தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல்?' என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார். 6

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து,
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது, தனக்கு அணி யாது மாதோ? 7

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலைமேல் ஆர முத்தை - யான் புகல்வது என்னோ? 8

மொய் கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த; - என்றால்,
செய்யவர்ச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர் அன்றே? 9

கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு,
இமை உற இமைக்கும் செங் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின், ஒப்பு ஆகும் அன்றே. 10

'தலை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள், இராமன் செங் கைமுறைமையின் தீண்ட நோற்ற;
அளியன; கங்குல் போதும் குவியல ஆகும்' என்று, ஆங்கு,
இள வெயில் சுற்றியன்ன எரி மணிக் கடகம் இட்டார். 11

சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில்,
வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டி,
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன, யார்க்கும்,
'இல்லை', 'உண்டு', என்ன நின்ற இடையினுக்கு இடுக்கன் செய்தார். 12

நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்-
புறம் செய் மேகலையின் தாழத் தாரகைச் சும்மை பூட்டி,
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சேயொளியின் சேந்து
கறங்குபு திரிய, தாமும் கண் வழுக்குற்று நின்றார். 13

ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள்தன் பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, 'சால
நொய்யவே; நொய்ய' என்றோ, பலபட நுவல்வது? அம்மா! 14

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன,
செஞ்செவே நீண்டு, மீண்டு, சேயரி சிதறி, தீய
வஞ்சமும் களவும் இன்றி, மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம். 15

மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த, முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல், அனையது ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும், எல்லாம், திலகத்தைத் திலகம் செய்தார். 16

சின்னப் பூ, செருகும் மென் பூ, சேகரப் போது, கோது இல்
கன்னப் பூ,கஞல, மீது, கற்பகக் கொழுந்து மான
மின்ன, பூஞ் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப,
புன்னைப் பூந் தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார் 17


தோழியர் சீதைக்கு அயினி சுற்றி காப்பு இடுதல்

நெய் வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து, செம் பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து, காப்பும் இட்டார். 18


மங்கையர் சீதையின் அழகைக் கண்டு மயங்கி நிற்றல்

கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி,
தம் சொற்கள் குழறி, தம் தம் தகை தடுமாறி நின்றார் -
மஞ்சர்க்கும், மாதரார்க்கும், மனம் என்பது ஒன்றே அன்றோ? 19

இழை குலாம் முலையினாளை, இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாவு ஓதி நல்லார், களி மயக்குற்று நின்றார் -
உழை குலாம் நயனத்தார் மாட்டு, ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்? 20

சங்கம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்றென்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது என்னோ? 21


சீதை மண்டபம் அடைதல்

பரந்த மேகலையும், கோத்த பாத சாலகமும், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும், சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப,
புரந்தரன் கோற்கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்தென்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார். 22

சிந்தொடு, குறளும், கூனும், சிலதியர் குழாமும், தெற்றி
வந்து, அடி வணங்கிச் சுற்ற, மணி அணி விதான நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள். 23

வல்லியை உயிர்த்த நிலமங்கை, 'இவள் பாதம்
மெல்லிய, உறைக்கும்' என அஞ்சி, வெளி எங்கும்,
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என, தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட, நடந்தாள். 24

தொழும் தகைய மென் நடை தொலைந்து, களி அன்னம்,
எழுந்து, இடைவிழுந்து, அயர்வது என்ன, அயல் எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ, ஓர் கலாபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என, வந்தாள். 25

மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்,
கண் மணி எனத் தகைய கன்னி எழில் காண,
அண்ணல் மரபின் சுடர், அருத்தியொடு தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள். 26

கற்றை விரி பொற் சுடர் பயிற்றுறு கலாபம்,
சுற்றும் மணி புக்க இழை மிக்கு, இடை துவன்றி,
வில் தழை, வாள் நிமிர, மெய் அணிகள் மின்ன,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள். 27

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள். 28


அனைவரும் சீதையின் அழகை ஒருங்கே பார்த்தல்

சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம், அச்
சமைத் திரள், முலைத் தெரிவை தூய் வடிவு கண்டார்,
அமைத் திரள் கொள் தோளியரும், ஆடவரும் எல்லாம்,
இமைத்திலர், உயிர்த்திலர்கள், சித்திரம் எனத் தாம். 29


சீதையைக் கண்ட இராமனது நிலை

அன்னவளை, 'அல்லள்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான். 30

'நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி, அருகு உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில் நினைப்பினிடை அல்லால்,
புறத்தும் உளதோ?' என மனத்தொடு புகன்றான். 31


வசிட்ட முனிவனின் மகிழ்ச்சி

'எங்கள் செய் தவத்தினில், இராமன் என வந்தோன்,
சங்கினொடு சக்கரமுடைத் தனி முதற் பேர்
அம் கண் அரசு; ஆதலின், அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம்' என, வசிட்டன் மகிழ்வுற்றான். 32

துன்று புரி கோதை எழில் கண்டு, உலகு சூழ்வந்து
ஒன்று புரி கோலொடு தனித் திகிரி உய்ப்பான்,
'என்றும், உலகு ஏழும், அரசு எய்தி உளனேனும்,
இன்று திரு எய்தியது; இது என்ன வயம்!' என்றான். 33


சீதையைத் தெய்வம் என நல்லோர் கைகூப்புதல்

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும், மா தவரும், அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ? 34

வணங்கற்கு உரியாரை முறைப்படி வணங்கி, சீதை தந்தையின் அருகில் இருத்தல்

மா தவரை முற்கொள வணங்கி, நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது, கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில், தனி இருந்தாள் -
போதினை வெறுத்து, அரசர் பொன் மனை புகுந்தாள். 35

விசுவாமித்திரனின் வியப்பு

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
'பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ?' 36


சீதை இராமனைக் கடைக்கண்ணால் கண்டு களித்தல்

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள். 37

கருங் கடை நெடுங் கண் ஒளி யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும்,
அருங் கலன் அணங்கு - அரசி, ஆர் அமிழ்து அனைத்தும்,
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து, உடல் தடித்தாள். 38

கணங் குழை, 'கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்,
வணங்கு வில் இறுத்தவன்' எனத் துயர் மறந்தாள்;
அணங்குறும் அவிச்சை கெட, விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள். 39

தயரதன் கோசிகனிடம் மண நாள் குறித்து வினாவுதல்

கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை, 'மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான். 40


நாளை திருமண நாள் என கோசிக முனிவன் கூறல்

'வாளை உகள, கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ, மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை' என, 'உற்ற பகல்' நல் தவன் உரைத்தான். 41


தயரதன் முதலிய யாவரும் தத்தம் இருப்பிடம் செல்ல, சூரியனும் மறைதல்

சொற்ற பொழுதத்து, அரசர் கைதொழுது எழ, தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்க,
பொன் - தட முடிப் புது வெயில் பொழிதர, போய்,
நல் தவர் அனுச்சை கொடு, நல் மனை புகுந்தான். 42

அன்னம் அரிதின் பிரிய, அண்ணலும் அகன்று, ஓர்
பொன்னின் நெடு மாட வரை புக்கனன்; மணிப் பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்; மா தவர்கள் போனார்;
மின்னு சுடர் ஆதவனும், மேருவில் மறைந்தான். 43

23. கடிமணப் படலம்

சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்

இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1

இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும், சொல்லும்

தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2

'"உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்" எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய்' எனுமால், 3

'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4

'கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5

'அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6

'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7

தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8

'தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9

'பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10

இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?' 11


இரவில் இராமனது நிலை

என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12

'முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்; -
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13

'திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14

'கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15

'நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16

'தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17

'கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே!' 18


மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்

மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
'"தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்!" என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக!' என்றான். 19

நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல்

முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார். 20

சூரியன் ஒளி வீசி விளங்குதல்

'அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர்' எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21


நகர மாந்தர் அணிசெய்த வகை

தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22

அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும், 23

சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும், 24

தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும், 25

மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும், 26

வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும், 27

பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும், 28

கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும், 29

தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும், 30

மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும். 31

கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும் அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும், 32

கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும், 33

கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34

தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும், 35

முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும், 36

விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், - 37

உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே. 38


மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்

கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39

வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40

மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே. 41

பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42


தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்

அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43

திருமண மண்டபத்தின் தோற்றம்

மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44

புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45

எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46

தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47


இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்

சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48

கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49

அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50

மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51

ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52

கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53

சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே. 54

பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55

கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
'மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்' என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56

மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57

தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59

மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
'ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு' என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60

சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61

'மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்' என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே; 62

சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63

முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64

காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65

'இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?' என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66

இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான். 67

முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68

இராமன் தேரில் ஏறி வரும் காட்சி

பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான். 69

பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70

நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71

அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72


மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்

அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73

'வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது' எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார். 74

சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே! 75

வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார் -
'உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!' எனக் கொடுக்கின்றாரினே. 76


மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல்

எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில் சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று சேர்ந்தான். 77

இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு, இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந் தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது, நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த வேலை, 78

சீதை மண்டபத்துள் வந்த காட்சி

சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில் வந்தாள். 79

திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து வருதல்

நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
'துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு' என்றார் அரோ. 80

ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்? 81

இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82


வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்

நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83

தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84


சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்

மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85


இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்

கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86


வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்

அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88


இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்

வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89

இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90

அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்

வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91


இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்

மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92


பல் வகை மங்கல ஆரவாரம்

ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93


இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94


மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன அளித்தல்

அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
'நல் மகனுக்கு இவள் நல் அணி' என்றார். 95

சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
'அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?' என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96

'எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!' என்றார். 97


இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்

நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98


வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்

பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99

பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்

வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், 'எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான். 100

கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101


தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்

வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102

ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்: 103


மிகைப் பாடல்கள்

எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள். 2-1

என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1

கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார். 21-1

என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1

24. பரசுராமப் படலம்

விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல்

தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும்,
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அந் நாள்வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி,
போனான் வட திசைவாய், உயர் பொன் மால் வரை புக்கான். 1


தயரதன் சேனைச் சுற்றமுடன் அயோத்திக்குப் பயணமாதல்

அப் போதினில் முடி மன்னவன், 'அணி மா நகர் செலவே,
இப்போது, நம் அனிகம்தனை எழுக!' என்று இனிது இசையா,
கைப் போதகம் நிகர் காவலர் குழு வந்து, அடி கதுவ,
ஒப்பு ஓத அரு தேர்மீதினில், இனிது ஏறினன், உரவோன். 2

தன் மக்களும், மருமக்களும், நனி தன் கழல் தழுவ,
மன் மக்களும், அயல் மக்களும், வயின் மொய்த்திட, மிதிலைத்
தொல் மக்கள் தம் மனம் உக்கு, உயிர் பிரிவு என்பது ஒர் துயரின்,
வன்மைக் கடல் புக, உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன். 3


இராமன் தம்பியரோடு சென்ற காட்சி

முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல, நடுவே,
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவிச் செல, மழைவாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன். 4

பறவைகள் அபசகுனமாய்ச் செல்வது கண்டு, தயரதன் தயங்கி நிற்றல்

ஏகும் அளவையின் வந்தன, வலமும் மயில், இடமும்
காகம் முதலிய, முந்திய தடை செய்வன; கண்டான்;
நாகம் அனன், 'இடை இங்கு உளது இடையூறு' என, நடவான்;
மாகம் மணி அணி தேரொடு நின்றான், நெறி வந்தான். 5


மன்னன் நிமித்திகனை வினாவ, அவன், 'இடையூறு இன்றே வந்து, நன்றாய்விடும்' எனல்

நின்றே, நெறி உணர்வான், ஒரு நினைவாளனை அழையா,
'நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ, நயம்' என்ன,
குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி தேர்வான்,
'இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும்' என்றான். 6


பரசுராமனது வருகையும், அது கண்டு தயரதன் சோர்தலும்

என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான்; மழு உடையான்;
பொன்னின் மலை வருகின்றது போல்வான்; அனல் கால்வான்;
உன்னும் சுழல் விழியான்; உரும் அதிர்கின்றது ஒர் மொழியான்; 7

கம்பித்து, அலை எறி நீர் உறு கலம் ஒத்து, உலகு உலைய,
தம்பித்து, உயர் திசை யானைகள் தளர, கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர் வெருவுற்று இரிதர, ஓர்
செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள் தெரிவான்; 8

'விண் கீழுற என்றோ? படி மேல்கீழ் உற என்றோ?
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ?-
புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக்
கண் கீறிய கனலான் முனிவு - யாது?' என்று அயல் கருத; 9

போரின்மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய,
தேரின்மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய,
நீரின்மிசை வடவைக் கனல் நெடு வான் உற முடுகி,
பாரின்மிசை வருகின்றது ஓர் படி வெஞ் சுடர் படர, 10

பாழிப் புயம் உயர் திக்கிடை அடையப் புடை படர,
சூழிச் சடைமுடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல், எரி, கால், நிலம், ஆகாயமும், அழியும்
ஊழிக் கடை முடிவில், தனி உமை கேள்வனை ஒப்பான்; 11

அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய, தனி படரும்
செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம் உயர்தோள்
வயிரப் பணை துணிய, தொடு வடி வாய் மழு உடையான்; 12

நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழுவாள் கொடு களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல் அதனில், புக முழுகித் தனி குடைவான்; 13

கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்; 14

சையம் புக நிமிர் அக் கடல் தழுவும்படி சமைவான்;
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்.
ஐயன்தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்,
'வெய்யன் வர நிபம் என்னைகொல்?' என வெய்துறும் வேலை. 15


எதிரே வந்த பரசுராமனை, 'யார்?' என இராமன் வினாவுதல்

பொங்கும் படை இரிய, கிளர் புருவம் கடை நெரிய,
வெங் கண் பொறி சிதற, கடிது உரும் ஏறு என விடையா,
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான்,
அம் கண் அரசன் மைந்தனும், "ஆரோ?" எனும் அளவில், 16


தயரதன் இடை வந்து வணங்க, சினம் தணியாது, பரசுராமன் பேசுதல்

அரைசன், அவனிடை வந்து, இனிது ஆராதனை புரிவான்,
விரை செய் முடி படிமேல் உற அடி மேல் உற விழவும்,
கரை சென்றிலன் அனையான், நெடு முடிவின் கனல் கால்வான்;
முரைசின் குரல் பட, வீரனது எதிர் நின்று, இவை மொழிவான்: 17


'உன் தோள் வலி அறிய இங்கு வந்தேன்' என இராமனை நோக்கி பரசுராமன் மொழிதல்

'இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி, யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது என் வரவு' என்றனன், உரவோன். 18


தயரதன் பரசுராமனிடம் அபயம் வேண்டுதல்

அவன் அன்னது பகரும் அளவையின், மன்னவன் அயர்வான்,
'புவனம் முழுவதும் வென்று, ஒரு முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும், அயன், அரியும் அலர்; சிறு மானிடர் பொருளோ?
இவனும், எனது உயிரும், உனது அபயம், இனி' என்றான். 19

'விளிவார் விளிவது, தீவினை விழைவாருழை அன்றோ?
களியால், இவன் அயர்கின்றன உளவோ? - கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய்! - பொர உரியாரிடை அல்லால்,
எளியாரிடை, வலியார் வலி என் ஆகுவது?' என்றான். 20

'நனி மாதவம் உடையாய்! "இது பிடி நீ" என நல்கும்
தனி நாயகம், உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை; முனிகின்றது முறையோ?' என மொழிவான். 21

'அறன் நின்றவர் இகழும்படி, நடுவின் தலை புணராத்
திறன் நின்று, உயர் வலி என்? அது ஓர் அறிவின் தகு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று, உயர் புகழ் ஒன்றுவது அன்றோ,
மறன் என்பது? மறவோய்! இது வலி என்பது வலியோ! 22

'சலத்தோடு இயைவு இலன், என் மகன்; அனையான் உயிர் தபுமேல்,
உலத்தோடு எதிர் தோளாய்! எனது உறவோடு, உயிர் உகுவேன்;
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய்! உனது அடியேன்;
குலத்தோடு அற முடியேல்; இது குறை கொண்டனென்' என்றான். 23

பரசுராமன் இராமன் எதிர் செல்லக் கண்டு, தயரதன் துன்பத்தில் ஆழ்தல்

என்னா அடி விழுவானையும் இகழா, எரி விழியா,
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா,
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என, வெந் துயர் உற்றான். 24


பரசுராமன் தன் கை வில்லின் பெருமை கூறி, 'நீ வல்லையேல், என் வில்லை வளை' என்று வீரம் பேசுதல்

மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,
தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;
'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்
ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்: 25

'ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன்; அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும் ஏலாதன, மேல்நாள்: 26

'ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்;
என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27

'"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது உன்னி,
வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை,
மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28

இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,
செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,
வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29

'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30

இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த
வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த!
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி' என்றான். 31

ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்;
மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்;
ஈனம் இல் எந்தை, "சீற்றம் நீக்கினான்" என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல, யான் சலித்து மன்னோ, 32

'மூ-எழு முறைமை, பாரில் முடியுடை வேந்தை எல்லாம்,
வேவு எழு மழுவின் வாயால், வேர் அறக் களைகட்டு, அன்னார்
தூ எழு குருதி வெள்ளத் துறையிடை, முறையின், எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்; அருஞ் சினம் அடக்கி நின்றேன். 33

'உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர் அரு வரை இருந்தேன்; ஆண்டை,
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற, சீறி வந்தேன்;
மலைகுவென்; வல்லைஆகின், வாங்குதி, தனுவை!' என்றான். 34

வில்லை வாங்கி வளைத்து, 'இதற்கு இலக்கு யாது?' என இராமன் பரசுராமனிடம் கேட்டல்

என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி, 'நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக!' என்ன, கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச, தோளுற வாங்கி, சொல்லும்: 35

'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!' என்றான். 36


பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை அம்புக்கு இலக்கு ஆக்குதல்

'நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37

'பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால், 38

'எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. 39

பரசுராமன் வாழ்த்தி, விடை பெற்றுச் செல்லுதல்

'எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை' எனத் தொழுது போயினான். 40


இராமன் தந்தையைத் தொழுது, அவரது துயரைப் போக்குதல்

அழிந்து, அவன் போனபின், அமலன், ஐ - உணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகு தாதையை,
பொழிந்த பேர் அன்பினால், தொழுது, முன்பு புக்கு,
இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான். 41


தயரதன் மகிழ்ந்து, இராமனை உச்சி மோந்து, பாராட்டுதல்

வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கிட,
தளிர்ப்பு உறு மத கரித் தானையான், இடை
குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன்,
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன். 42

பரிவு அறு சிந்தை, அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி, ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து, தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். 43

'பொய்ம்மை இல், சிறுமையில் புரிந்த, ஆண் தொழில்,
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ?
மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு,
இம்மையும் மறுமையும் ஈயும்' என்றனன். 44

தேவர்கள் மலர் மழை பொழிய இராமன் வருணனிடம், 'சேமித்து வை' என்று, பரசுராமனின் வில்லைக் கொடுத்து, அயோத்தி சேர்தல்

பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை
சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ,
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். 45


தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல்

நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை,
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்,
அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை,
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்: 46

'ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்,
கேணியில் வளை முரல் கேகயம் புக,
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி' என்றனன். 47


இராமனை வணங்கிப் பரதன் கேகய நாட்டிற்குப் புறப்படுதல்

ஏவலும், இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து, போயினான் -
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்,
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே. 48


சத்துருக்கனோடு பரதன் ஏழு நாளில் கேகய நாடு சென்று சேர்தல்

உளை விரி புரவித் தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும், ஏழு நாளிடை,
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான். 49

ஆனவன் போனபின், அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை,
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்,
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம் அரோ. 50


மிகைப் பாடல்கள்

கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டது போல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை, அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான். 14-1

No comments:

Post a Comment