Friday, August 7, 2009

Kamba Ramayanam (Full Version), Bala Kandam Part - I

பால காண்டம்
http://ondemand.erosentertainment.com/img/product/bigger/ondemnd_1.jpg

பாயிரம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5

வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9

நூல் வழி

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10

இடம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11

1. ஆற்றுப் படலம்

மழை பொழிதல்

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே. 2

பம்பி மேகம் பரந்தது, 'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றுதும்' என்று, அகன் குன்றின்மேல்,
இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3

புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின - மேகமே. 4

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதல்

மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது-நீத்தமே. 5

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே. 6

மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தண்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே. 7

பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம் பொன் விராவியும்,
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே. 8

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே. 9

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்-
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே. 10

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11

சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச் சிறப்பும்

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 12

கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி,
அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14

செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியொடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே. 16

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே. 17

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே. 18

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே. 19

நீர் பாய்ந்து யாவையும் எழிலுடன் விளங்குதல்

தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே. 20

ஒன்று ஆய், இரண்டு சுடர் ஆய், ஒரு மூன்றும் ஆகி,
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு, ஐம்பூதம் ஆகி,
அன்று ஆகி, அண்டத்து அகத்து ஆகி, புறத்தும் ஆகி,
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம். 1

நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை
மாலை மால் கெட, வணங்குதும் மகிழ்ந்தே. 2

காயும் வெண்பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை,
மேய நான்மறை தொழ, விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம். 3

மாதுளங் கனியை, சோதி வயங்கு இரு நிதியை, வாசத்
தாது உகுநறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை,
மோது பாற்கடலின் முன் நாள், முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம். 4

பராவ அரு மறை பயில் பரமன், பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்,
அரா-அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன், மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம். 5

கலங்கா மதியும், கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும், போகா இலங்கா
புரத்தானை, வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை, நெஞ்சே! தரி. 6

'நாராயணாய நம!' என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து, ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே. 7

பராவரும் இராமன், மாதோடு இளவல் பின் படரக் கான்போய்,
விராதனை, கரனை, மானை, கவந்தனை, வென்றிகொண்டு,
மராமரம், வாலி மார்பு, துளைத்து, அணை வகுத்து, பின்னர்,
இராவணன் குலமும் பொன்ற எய்து, உடன் அயோத்தி வந்தான். 8

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான். 10

எவ் இடத்தும், இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும், அஞ்சலி அத்தனாய்,
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம் அரோ. 11

பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை விமலையை, அமலைதன்னை,
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம். 12

தழை செவி, சிறு கண், தாழ் கைத் தந்த சிந்துரமும், தாரை
மழை மதத் தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை,
இழை இடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன், அன்பால்-'குறைவு அற நிறைக' என்றே. 13

எக் கணக்கும் இறந்த பெருமையன்,
பொக்கணத்தன், புலி அதள் ஆடையன்,
முக்கண் அத்தன், வரம் பெற்ற மூப்பனை,
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம். 14

தனியன்

நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1

அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற,
தாழ்வார் உயர, புலவோர் அக இருள் தான் அகல,
போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. 3

அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால், முனிவரால், யோகரால், உயர்
இம்பரால், பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். 4

சம்பு, அ(ந்)நாள், தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். 5

இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே;
அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. 6

ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்,
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான்,
மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம். 7

ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து,
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு, மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் -
கார் ஆர் காகுத்தன் கதை. 8

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே, கவி அரங்கேற்றினானே. 9

கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன், மறை வேதியருடன் ஆராய்ந்து,
எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. 10

கரை செறி காண்டம் ஏழு, கதைகள் ஆயிரத்து எண்ணூறு,
பரவுறு சமரம் பத்து, படலம் நூற்றிருபத் தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு;
வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே. 11

தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே - இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி. 12

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி, அரசு ஆண்டு இருந்தாலும்,
உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும்,
செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில்,
கம்பநாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே. 13

நாரதன் கருப்பஞ் சாறாய், நல்ல வான்மீகன் பாகாய்,
சீர் அணி போதன் வட்டாய், செய்தனன்; காளிதாசன்,
பார் அமுது அருந்தப் பஞ்சதாரையாய்ச் செய்தான்; கம்பன்,
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே. 14

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால். 15

ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே,
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
'இராம' என்று ஒரு மொழி இயம்பும் காலையே. 16

மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக்
கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். 17

வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும்,
'நன்று இது' என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே. 18

இறு வரம்பில் 'இராம' என்றோர், உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்,
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? 19

அன்ன தானம், அகில நல் தானங்கள்,
கன்னி தானம், கபிலையின் தானமே,
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்கு அரோ. 20

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21

இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22

'ஆதி "அரி ஓம் நம" நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர்,
நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில்
சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார்' என உரைத்த, கருதித் தொகைகளே. 23

இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்,
பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து,
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. 24

இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர்,
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர்,
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து,
வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். 25

நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. 26

வான் வளம் சுரக்க! நீதி மனு நெறி முறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க, எங்கும்! 27

பாயிரம்

எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன்; மொழிந்த என் சொல்
சிறுமையும், சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால்,
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம், அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. 9-1

2. நாட்டுப் படலம்

கோசல நாட்டு வளம்

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். 1

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம். 2

மருத நில வளம்

ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி. 3

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ. 4

தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ. 5

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 6

படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், -கண்மலர்ந்து ஒளிரும் மாதோ. 7

தெள் விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே. 8

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ. 9

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? 10

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே? 11

வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ. 12

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை. 13

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை. 14

மக்கள் பொழுது போக்கும் வகை

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்; 15

கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16

எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17

முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்; 18

கடல் வாணிகம்

முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல். 19

வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார். 21

முந்து முக் கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும். 22

செல்வச் செழிப்பு

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, 'ஒண் பெடை ஆம்' எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ. 23

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
பாளை தந்த மதுப் பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம். 24

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட; மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே. 25

முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே. 26

சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன; 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28

தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29

பெருகிக் கிடக்கும் நால் நில வளம்

குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே. 31

கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே. 32

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே. 33

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி. 34

சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே. 35

ஈகையும் விருந்தும்

பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே? 36

ஊட்டிடத்தும் குடிகளிடத்தும் உள்ள பொருள்கள்

பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம். 37

கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம். 38


நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே. 39

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே. 40

பல் வகைப் புகைகள்

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்,
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும். 41

மகளிரின் அங்கம் போன்ற இயற்கை எழில்

இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன; மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி. 42

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம். 43

ஒப்பிலா மகளிர் விழி

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம். 44

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுரை; கார்
முகிலினொடு இகலுவ, கடி மண முரசம். 45

பெருகித் திகழும் பல் வளம்

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம். 46

நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன-மணி படு புளினம். 47

இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்; 48

மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம். 49

பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ். 50

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்; 51

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே. 52

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால். 53

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே. 54

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே. 55

விழாவும் வேள்வியும்

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே. 58

மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன, கால மாரியே. 59

சோலை மா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே! 60

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம். 61

மிகைப் பாடல்கள்

காளையர் சேறுதன்னைக் கலந்து, உடன் மிதித்து, நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்; தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி, அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும், பாளை நாறும்; வயல்களும் அதுவே நாறும். 14-1

3. நகரப் படலம்

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம். 1

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ!மாயோன்மார்பில்நன்மணிகள் வைத்தபொற் பெட்டியோ!வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? 2

உமைக்கு ஒருபாகத்து ஒருவனும்,இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும்,மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர்திரிவர்; இது அலால்அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!3

அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும்,அளகையும் என்று இவை,அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ? 4

'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்அருங்குணத்தின்அவன்,இனிதுஇருந்து,இவ்ஏழ்உலகுஆள்இடம்என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்? 5

தங்கு பேர் அருளும் தருமமும்,துணையாத் தம் பகைப்புலன்கள் ஐந்துஅவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? 6

நகர மதிலின் மாட்சி

நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
மால்வரைக் குலத்துஇனியாவையும் இல்லை;ஆதலால்,உவமை மற்றுஇல்லை;
நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே. 7

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும். 8

பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
அம்சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகுடைத்து அன்று எனஅறிவான்,
இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே! 9

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே! 10

சினத்து அயில், கொலை வாள், சிலை,மழு,தண்டு,சக்கரம்,தோமரம்,உலக்கை,
கனத்திடைஉருமின்வெருவரும்கவண்கல்,என்றுஇவைகணிப்புஇல;கொதுகின்
இனத்தையும்,உவணத்துஇறையையும்,இயங்கும்காலையும்,இதம்அலநினைவார்
மனத்தையும், எறியும்பொறி உள என்றால்,மற்று இனிஉணர்த்துவது எவனோ?11

'பூணினும் புகழே அமையும்'என்று,இனையபொற்பில் நின்று,உயிர் நனிபுரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே. 12

ஆழ்ந்த அகழியின் மாண்பு

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம். 13

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே. 14

அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே. 15

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே. 16

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 17

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே. 18

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே? 19

அகழியைச் சூழ்ந்த சோலை

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 20

நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற; முன்னம், மால்,
ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த; வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே. 21

தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே. 22

எழு நிலை மாடம்

கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே, 23

மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ, 24

ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே. 25

மாளிகைகளின் அமைப்பும் எழிலும்

'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே. 26

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே. 27

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே. 28

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடியே. 29

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன. 30

புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும். 31

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி; தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில; பகலை வென்றன. 32

வானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன. 33

அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த;
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன;-மலையும் போன்றன. 34

கொடிகள் பறக்கும் அழகு

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே. 35

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன;-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 36

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே. 37

மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்

பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 38

மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே! 39

எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர். 40

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ? 41

ஆடலும் பாடலும்

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை. 42

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ; வாட் கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன. 43

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா. 44

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன; வளர்வது, ஆசையே. 45

பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன; அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே. 46

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ்வழி
கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே. 47

மங்கையரின் அழகு மேனி

குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே. 48

பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே? 49

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே. 50

மதங்கியரின் ஆடல் பாடல்

பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே. 51

மாந்தரின் மகிழ்ச்சி

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன; அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே. 53

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே. 54

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே. 55

இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன; அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே. 56

விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ;
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ;
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ;
மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே. 57

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே! 58

அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
மதுகரம் இசைப்பன;-மைந்தர் ஈட்டமே. 59

வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே. 60

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம். 61

இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன, புரவிப் பந்தியே. 62

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை,
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே. 63

மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே. 64

நகர மாந்தரின் பொழுது போக்குகள்

ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர். 65

முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்,
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர். 66

கரியொடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர். 67

நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர். 68

கொடிகளும், தோரண வாயில் முதலியவும்

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ. 69

வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண. 70

காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ! 71

செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி

தெள் வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. 72

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ. 73

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே. 74

மிகைப் பாடல்கள்

அரைசு எலாம் அவண; அணி எலாம்அவண; அரும் பெறல்மணி எலாம்அவண;
புரைசை மால் களிறும், புரவியும், தேரும், பூதலத்து யாவையும், அவண;
விரைசுவார், முனிவர்; விண்ணவர், இயக்கர், விஞ்சையர், முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார்; ஆனபோது, அதனுக்கு உவமை தான் அரிதுஅரோ, உளதோ? 6-1

எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி, எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற, மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி, தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம்? 74-1

வேதம் அதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி, தொல் உயிர்த் தொகை பலவாய்,
ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே, பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம். 74-2

4. அரசியற் படலம்

தயரதன் மாண்பு

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். 1

ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2

மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். 4

ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். 5

வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6

உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்

நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7

பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8

தயரதனின் குடையும் செங்கோலும்

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9

தயரதன் அரசு செய்யும் திறம்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். 10

குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. 11

'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். 12

மிகைப் பாடல்கள்

விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1

5. திரு அவதாரப் படலம்

மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல்

ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ; 1

'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன். 2

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ. 3

'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன். 4

முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்

முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்- 5

அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே. 6

பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ. 7

இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால். 8

திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன், 9

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான். 10

எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார். 11

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12

பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான். 13

விதியொடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்: 14

'ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன; -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார். 15

'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர். 16

என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்: 17

'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18

'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19

'வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன். 20

என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால். 21

'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோ ன், கலுழன்மேல் சரணம் வைத்தான். 22

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான். 23

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன;
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்' என்று ஓத;
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால். 24

வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ . 25

அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார். 26

புதல்வரை அளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறுதல்

ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான். 27

வேள்வி செய்ய வேண்டுவது யாது என தயரதன் வினவுதல்

என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான். 28

கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு வேள்வி செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்

'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன், 29

'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும். 30

'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான். 31

கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரும் வழி பற்றி தயரதன் கேட்டல்

ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான். 32

கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை வசிட்டன் உரைத்தல்

'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான்,மனுகுலத்தே வந்து உதித்தோன்,இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்றுஉளன்,இவ் உலகை ஆள்வோன்;33

'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும்" என்றார்.34

'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என, வணக்கம் செய்தார். 35

ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
ஏங்கும் இடை,தடித்த முலை,இருண்ட குழல்,மருண்ட விழி,இலவச் செவ்வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே. 36

'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார். 37

'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர். 38

'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர். 39

'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான் அரோ. 40

'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்" என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான். 41

'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள் நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே. 42

'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே. 43

'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன். 44

"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?" 45

'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான். 46

'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர;
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, "நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்" என்றான். 47

'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன். 48

'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ. 49

'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன். 50

'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன். 51

'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன். 52

'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன். 53

கலைக்கோட்டு முனிவனை அழைக்கத் தயரதன் உரோமபதன் நாட்டுக்குச் செல்லுதல்

என்றலுமே,முனிவரன்தன் அடிஇறைஞ்சி,'ஈண்டு ஏகிக் கொணர்வென்'என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார் மலர் மாரி, இடைவிடாமல். 54

காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே. 55

உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து உபசரித்தல்

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால் வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள் எண்ணி. 56

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்: 57

'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம் மகிழா மணித் தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான் 58

ஆடகப் பொன் சுடர்,இமைக்கும் அணி மாடத் திடை,ஓர் மண்டபத்தை அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன் பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும் நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.59

கலைக்கோட்டு முனிவனை தயரதன் விருப்பப்படி அயோத்திக்கு அழைத்துவருவதாக உரோமபதன் கூறல்

செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, 'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!'எனலும்,தேர்ஏறிச் சேனையொடும்அயோத்தி சேர்ந்தான்.60

உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப் புறப்படுதல்

மன்னர்பிரான் அகன்றதன்பின்,வயவேந்தன்,அருமறைநூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி,அடிஇணைத்தாமரைகள் அம்பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, 'இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்!' என, 'யாவது?' என்றான். 61

'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன்ஒன்றும் திருமனத்தான்,அமரர்களுக்கு இடர்இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடிவேலான்,"தசரதன்" என்று,உயர்கீர்த்திச் செங்கோல்வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்!' என்றான். 62

'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என, அருந் தவத்தோன் அறைதலோடும்,
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி, 'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து, 'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என, ஏறிச் சிறந்தான் மன்னோ. 63

முனிவன் போவதைக் கண்டு, தேவர்கள் மகிழ்தல்

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார். 64

அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே. 65

தயரதன் மகிழ்வுடன் முனிவனை எதிர்கொள்ளல்

தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர், முனி வரவு; ஓத, வேந்தனும்,
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன். 66

எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை, வேரினோடுமே. 67

தயரதன் அடிவணங்க, முனிவன் ஆசி கூறுதல்

'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்று கொண்டு,
அதிர்ந்து எழு முரசுடை அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவமுடை முனியை, கண்களால்
எதிர்ந்தனன், ஓசனை இரண்டொடு ஒன்றினே. 68

நல் தவம் அனைத்தும், ஓர் நவை இலா உருப்
பெற்று, இவண் அடைந்தெனப் பிறங்குவான் தனை,
சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
முற்று உறப் பொலிதரு மூர்த்தியான் தனை, 69

அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும்,
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை,
குண்டிகை, குடையொடும், குலவு நூல் முறைத்
தண்டொடும், பொலிதரு தடக் கையான் தனை, 70

இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள் மலர்
விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான். 71
தயரதன் முனிவனுடன் அயோத்தியை அடைதல்

அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72

அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73

வசிட்டனுடன் கலைக்கோட்டு முனிவன் அரசவை அடைதல்

கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74

தயரதன் கலைக்கோட்டு முனிவனை உபசரித்து மொழிதல்

மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்: 75

'சான்றவர் சான்றவ! தருமம், மா தவம்,
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும், இழப்பு இன்றாம் அரோ.' 76

முனிவன் தன்னை அழைத்த காரணம் வினாவுதல்

என்னலும், முனிவரன் இனிது நோக்குறா,
'மன்னவர்மன்ன! கேள்: வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்,
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?' 77

என்று இவை பற்பல இனிமை கூறி, 'நல்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ,
இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான். 78

மைந்தர் இல்லாக் குறையை மன்னன் தெரிவித்தல்

'உலப்பு இல் பல் ஆண்டு எலாம், உறுகண் இன்றியே,
தலப் பொறை ஆற்றினென்; தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற, இனி நல்க வேண்டுமால்.' 79

மைந்தரை அளிக்கும் வேள்வி இயற்றவேண்டும் என முனிவன் கூறுதல்

என்றலும், 'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான். 80

மன்னன் யாகசாலையில் புகுதல்

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்,
தூய நல் புனல் படீஇ, சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். 81

முனிவன் பன்னிரு திங்கள் வேள்வி இயற்றி, மகவு அருள் ஆகுதி வழங்குதல்

முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர்-அறு திங்கள் வாய்த்த பின்,
தழங்கின துந்துமி; தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர், வெளி இன்று என்னவே. 82

முகமலர் ஒளிதர மொய்த்து, வான் உளோர்,
அக விரை நறு மலர் தூவி, ஆர்த்து எழ,
தகவுடை முனியும், அத் தழலின் நாப்பணே,
மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ. 83

வேள்வித் தீயில் பூதம் எழுந்து, சுதை நிகர் பிண்டத்தைத் தரையில் வைத்து மறைதல்

ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84

வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
'உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
அத் தகு மரபில்நின்று, அளித்தியால்' என்றான். 85

முனிவன் பணித்தபடி, தயரதன் தம் மனைவியர் மூவர்க்கும் பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல்

மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86

கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87

நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, 'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே. 88

பிதிர்ந்து வீழ்ந்ததையும் தயரதன் சுமித்திரைக்கு அளித்தல்

பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89

வேள்வி முடிந்தபின் தயரதன் அரசவைக்கு வருதல்

வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட முடிந்தபின், உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே. 90

முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான். 91

தேவர் முதலிய யாவர்க்கும் சிறப்புச் செய்து, சரயு நதியில் தயரதன் நீராடுதல்

செய்ம் முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே
மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து, விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன், கனக மாரியே. 92

வேந்தர்கட்கு, அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி, நீர்
தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே. 93

தயரதன் வசிட்டனை வணங்குதல்

முரசு இனம் கறங்கிட, முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
அரசவை அடைந்துழி, அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி, ஓங்கினான். 94

தம்மை வணங்கிய தயரதனுக்கு ஆசி கூறி, கலைக்கோட்டு முனிவன் தன் இருப்பிடத்திற்கு மீள்தல்

அரிய நல் தவமுடை வசிட்டன் ஆணையால்,
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா,
உரிய பற்பல உரை பயிற்றி, 'உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப் பெறுவது யாது?' என்றான். 95

'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன்' என்ன, ஒண் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி, தேர்மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான். 96

ஏனைய முனிவரும் ஆசி வழங்கி நீங்குதல்

வாங்கிய துயருடை மன்னன், பின்னரும்,
பாங்குரு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
நீங்கினர்; இருந்தனன், நேமி வேந்தனே. 97

தேவிமார் மூவரும் கருவுறுதல்

தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்,
பொரு அரு திரு முகம் அன்றி, பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார். 98

கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101

கைகேயி மைந்தனைப் பெறுதல்

ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102

சுமித்திரை இரு மகவு ஈன்றாள்

தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள். 104

வானவர் மகிழ்ச்சி

ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
ஓடினர், உலாவினர், உம்பர் முற்றுமே. 105

புதல்வர் பிறந்ததைச் சேடிமார் தயரதனிடம் தெரிவித்தலும்,
சோதிடர் ஆய்ந்து, 'நாள் முதலியன நன்று' என்பதும்

ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; 'உலகு இனி நவை இன்று' என்றனர். 106

தயரதன் புனல் படிந்து, தானம் செய்து பின் குழந்தைகளைப் பார்த்தல்

மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான். 107

புதல்வர் பிறந்த மகிழ்ச்சியில் தயரதன் புரிந்த நற்பணிகள்

'"இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
முறை கெட, வறியவர் முகந்து கொள்க" எனா,
அறை பறை' என்றனன் - அரசர் கோமகன். 108

'படை ஒழிந்திடுக; தம்பதிகளே, இனி,
விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109

'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
மாலையும் தீபமும், வழங்குக' என்றனன். 110

செய்தி கேட்ட நகர மாந்தரின் மகிழ்ச்சி

என்புழி, வள்ளுவர், யானை மீமிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மலால்,
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார். 111

ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர் பொடித்த; நீள் நிதி
தூர்த்தனர், எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;-
'தீர்த்தன்' என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே? 112

பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து,
எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,
சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 113

பன்னிரண்டு நாள் கழித்து வசிட்டன் குழந்தைகளுக்குப் பெயரிடுதல்

இத்தகை மா நகர், ஈர்-அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்தே,
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான். 114

இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன், என நால்வருக்கும் பெயர் வைத்தல்

சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115

சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
'பரதன்' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116

உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
'இலக்குவன்' என்ன, இசைத்தனன் அன்றே, 117

'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். 118

பெயரிட்ட போது தயரதன் தானம் செய்து உவத்தல்

பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119

தம் குமாரர்கள் மீது தயரதன் கொண்ட அன்பு

'காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது' என, அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120

குமாரர்களின் வளர்ச்சி

அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்- 121

வசிட்டன் கல்வி கற்பித்தல்

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று,
'இ(வ்)அளவது' என ஒரு கரை பிறிது இலவா,
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. 122

படைப் பயிற்சி

யானையும், இரதமும், இவுளியும், முதலா
ஏனைய பிறவும், அவ் இயல்பினில் அடையுற்று,
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா,
வானவர் தனிமுதல், கிளையொடு வளர, 123

முனிவர் முதலிய யாவரும் குமாரர்களை விரும்புதல்

அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அந் நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும், இவர்களின்; இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், உறை' என உறுவார். 124

இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும், இணைபிரியாதிருத்தல்

ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
'நெய் குழல் உறும் இழை' என நிலைதிரிவார். 125

பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு பொழுதினும், ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே. 126

நான்கு குமாரரும் முனிவரர் இருப்பிடம் சென்று மாலையில் மீள்தள்

வீரனும், இளைஞரும், வெறி பொழில்களின்வாய்,
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால். 127

ஏழையர் அனைவரும், இவர் தட முலை, தோய்
கேழ் கிளர் மதுகையர், கிளைகளும், 'இளையார்
வாழிய!' என, அவர் மனன் உறு கடவுள்-
தாழ்குவர்-கவுசலை தயரதன் எனவே. 128

'கடல் தரு முகில், ஒளிர் கமலம் அது அலரா,
வட வரையுடன் வரு செயல் என, மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்,
புடை வரும் இளவலும்' என, நிகர் புகல்வார். 129

நகரத்தவரின் நலனை இராமன் உசாவுதலும், அவர்கள் உவந்து விடையளித்தலும்

எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?' எனவே, 130

அஃது, 'ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன்
உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார். 131

யாவரும் போற்ற, இராமன் இனிது இருத்தல்

இப் பரிசு, அணி நகர் உறையும் யாவரும்,
மெய்ப் புகழ் புனைதர, இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற,
முப் பரம் பொருளினும் முதல்வன் வைகுறும். 132

மிகைப் பாடல்கள்


'பொறை இலா அறிவு, போகப் புணர்ப்பு இலா இளமை, மேவத்
துறை இலா வனச வாவி, தூசு இலார் போலித் தூய்மை,
நறை இலா மலரும், கல்வி நலம் இலாப் புலமை, நன்னீர்ச்
சிறை இலா நகரும், போலும், சேய் இலாச் செல்வம்' என்றான். 4-1

சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யான் இனி
அடுகிலென்' என மறுத்து, அவரொடு ஏகினான். 5-1

கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்,
முறைமையின் கடன் முறை முற்றி, முண்டகத்து
இறைவனும், அவரொடும் இனிதின் ஏகினான். 5-2

வடவரைக் குடுமியின் நடுவண், மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடி தொழுது, அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ. 5-3

என்று இனையன பல இயம்பி, 'எங்கணும்,
கன்றி, அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்,
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
இன்று நீ படைத்தி' என்று இசைத்து, பின்னரும். 5-4

1 comment: