Thursday, August 6, 2009

Agananuru (Full Collection) - Part II

2. மணிமிடை பவளம்


121

நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
வேனில் நீடிய வானுயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்

5


சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொறிபுறம் உரிஞிய நெறியியல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி-

10


உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கணைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே.

15

122

நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்
விழவின் றாயினும் துஞ்சா தாகும்:
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்.

5


துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின்

10


அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே;
திங்கள் கல்சேர்வு கனைஇருள் மடியின்,
இல்எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,

15


மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே; அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன்மா

20


நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன
பல்முட் டின்றால் - தோழி!- நம் களவே.

23

123

உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல,
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்: சிறந்த

5


சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி-வாழிய, நெஞ்சே!-நிலவு என
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழைமருள் பல்தோல் மாவண் சோழர்

10


கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல,
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே.

12

124

'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்துதிறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
'சென்றீக' என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே,

5


மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத்
துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுறப்,
பாசறை வருத்தம் வீட, நீயும்-
மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக்,
கொய்சுவல் புரவிக், கைகவர் வயங்குபரி

10


வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரிய,
காலை எய்தக், கடவு மதி - மாலை
அந்திக் காவலர் அம்பணை இமிழ்இசை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே.

16

125

அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-
ஈர்ங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத்

5


தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப்,
படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்,
பெய்துவறிது ஆகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்,

.10


பனிஅடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்

15


விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல,
ஓடுவை மன்னால் - வாடை!- நீ எமக்கே.

22

126

நினவாய் செத்து நீபல உள்ளிப்,
பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று

5


அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க,
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ்வாங்கு உந்தி, அஞ்சொல் பாண்மகள்,
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்

10


பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்,
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்,

15


திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே - கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப், பெரிய
கயலென அமர்த்த உண்கண், புயலெனப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்:
மின்னோர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே!

22

127

இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்கஞர் உழந்து, நாம்இவண் ஒழிய
வலம்படு முரசின் சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து,

5


நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்றவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன,

10


ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள்
தங்கலர் - வாழி, தோழி!- செங்கோற்
கருங்கால் மராஅத்து வாஅல் மெல்இணர்ச்
சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்,
கல்லா மழவர் வில்லிடம் தழீஇ,

15


வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
பழிதீர் காதலர் சென்ற நாட்டே.

18

128

மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமம் கொளவரின் கனைஇக், காமங்
கடலிலும் உரைஇக், கரைபொழி யும்மே
எவன்கொல்- வாழி, தோழி!- மயங்கி

5


இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்புபட்டு இருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்,
கான நாடன் வரூஉம், யானைக்

10


கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச் சிறுநெறி,
மாரி வானந் தலைஇ நீர்வார்பு,
இட்டருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?

15

129

'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர்
நின்மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக்'
கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,

5


கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்,
போகில்பிளந் திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்குற் கூட்டும்

10


கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்,
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்,
செருப்புடை அடியர், தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல; வார்கோல்
திருந்திழைப் பணைத்தோள் தேன்நாறு கதுப்பின்

15


குவளை உண்கண், இவளொடு செலற்கு 'என
நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்-
அஞ்சில் ஓதி ஆயிழை!- நமக்கே. .129-18

130

அம்ம வாழி, கேளிர்! முன்நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ-
நுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை

5


எயிறுடை நெடுந்தோடு காப்பப், பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்,
புலவுப்பொருது அழித்த பூநாறு பரப்பின்
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்

10


நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போதுபுறங் கொடுத்த உண்கண்
மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே.

14

130

'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்
பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்ன,
வண்டுபடுபு இருளிய, தாழ்இருங் கூந்தல்
சுரும்புஉண விரிந்த பெருந்தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு என

5


வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ் சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்,

10


பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் 'நம்மொடு
வருக' என்னுதி ஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே.

15

132

ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து,
ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின்,
களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி,
வால்நிணப் புகவின், கானவர் தங்கை

5


அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்
ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை

5


வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங்கவுட் கடாஅம் கனவும்,
பெருங்கல் வேலி, நும் உறைவின் ஊர்க்கே.

14

133

'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பக்,
கார்தலை மணந்த பைம்புதற் புறவின்,

5


வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்,
கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று

10


வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன்ஒன்று வினவினர் மன்னே- தோழி!-
இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
கொல்புனக் குருந்தொடு கல்அறை தாஅம்

15


மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
வரிமரல் கறிக்கும் மடப்பிணைத்
திரிமருப்பு இரலைய காடிறந் தோரே.

18

134

வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென;
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்,
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்

5


செய்கை அன்ன செந்நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து, ஏமதி- வலவ! குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த

10


ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.

14

135

திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்,
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுதெழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து,
ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப்

5


பேதுற் றிசினே - காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடிறந் தனரே, காதலர்; அடுபோர்,

10


வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை,
ஈர்-எழு வேளிர் இயந்துஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்தஎன் நெஞ்சே.

14

136

மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,

5


கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை,

10


பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

15


மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,

20


பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென

25


நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப்
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.

29

137

ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇச்,
களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தம்
சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்

5


இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்

10


தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,
தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல்லெழில் நெடுவேய் புரையும்
தொல்கவின் தொலைந்தன: நோகோ யானே.

16

138

இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
குவளை உண்கண் தெண்பனி மல்க,
வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதொன்று கடுத்தனள் ஆகி - வேம்பின்
வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி,

5


உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத்,
திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில்
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது,
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக்,

10


கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
தேடினர் ஆதல் நன்றோ?- நீடு
நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி,

15


நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள்,
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி
நன்னிறம் மருளும் அருவிடர்
இன்னா நீள்இடை நினையும்என் நெஞ்சே.

20

139

துஞ்சுவது போலஇருளி, விண்பக
இமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு
ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு,
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்;

5


ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை
வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப்
புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத்,
தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து
வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை;

10


வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ;

15


இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்!
யாதுகொல் மற்றுவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர்: 'வருதும்' என்றதுவே.

19

140

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழி செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

5


சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,

10


இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே.

15

141

அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி

5


மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

10


விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ

15


கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது:

20


நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை

25


நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே.

29

142

இலமலர் அன்ன அம்செந் நாவிற்
புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற

5


குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டரு மரபின் அஞ்ு வரு பேய்எக்

10


கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய,

15


நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து.

20


உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்:
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே.

26

143

செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய வாக, ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு

5


முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி - ஐய!
சேறும்' என்ற சிறுசொற்கு... இவட்கே,
வசைஇல் வெம்போர் வானவன் மறவன்

10


நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல்அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக்,
கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே.

16

144

"வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
அரியேர் உண்கண் நீரும் நில்லா;
தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,

5


அருள்கண் மாறலோ மாறுக- அந்தில்
அறன்அஞ் சலரே!- ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல

10


உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின்
ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்,
பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி

15


மானடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப,
அமரோர்த்து, அட்ட செல்வம்
தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.

19

145

வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு

5


ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர்

10


அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,

15


துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம்,

20


'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!

22

146

வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ,
படப்பை நண்ணிப், பழனத்து அல்கும்
கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர்

5


ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அனியள் தானே- எம்போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின்

10


கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து
ஆயமும் அயலும் மருளத்,
தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளோ?

13

147

ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடரளைப் பிணவுபசி கூர்ந்தெனப்,

5


பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து,

10


உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே!

14

148

பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்,
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து,

5


சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட!
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது, களம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை

10


பெரிதால் அம்ம இவட்கே: அதனால்
மாலை வருதல் வேண்டும் - சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே.

14

149

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும்

5


அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

10


வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

15


ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.

19

150

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,

5


அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக்

10


கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்-
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!

14

151

'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என,
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன் - வாழி, தோழி ! கால் விரிபு

5


உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும்

10


பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
மணிஓர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே!

15

152

நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்

5


இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல்,

10


இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே-
வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி

15


சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி-
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும்,

20


மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே.

24

153

நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
வெம்புமன், அளியள் தானே - இனியே,
வன்க ணாளன் மார்புஉற வளஇ,

5


இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு,
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப்

10


பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே- எல்லி
ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித்

15


தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?

19

154

படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப,

5


வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி

10


ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி - வலவ! தேரே- சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.

15

155

'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்றுநம்
இருளேர் ஐம்பால் நீவி யோரே-
நோய்நாம் உழக்குவம் ஆயினும், தாந்தம்

5


செய்வினை முடிக்க தோழி ! பல்வயின்
பயநிரை சேர்ந்த பாண்நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி,
நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது

10


பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி,
செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை
மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரலூன்று வடுவில் தோன்றும்
மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே.

16

156

முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சிக், காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக்

5


காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும்
தீம்புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத், தலைப்பெய,

10


'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின்நகாப் பிழைத்த தவறே - பெரும!
கள்ளுங் கண்ணியும் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நாள்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித்,

15


தணிமருங்கு அறியாள், யாய்அழ,
மணிமருள் மேனி பொன்னிறம் கொளலே?

17

157

அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
வரிநிறக் கலுழி ஆர மாந்திச்
செருவேட்டுச், சிலைக்கும் செங்கண் ஆடவர்,
வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின்

5


எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்
கான யானை கவளங் கொள்ளும்
அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார்
நெஞ்சுண மொழிப மன்னே - தோழி

10


முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து, வெயிலுறச் சாஅய்
வினையழி பாவையின் உலறி,
மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே!

15

158

'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்,
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,

5


மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என
அலையல் - வாழிவேண்டு அன்னை!- நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்

10


கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு,

15


முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே!

18

159

தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
உரறுடைச் சுவல பகடுபல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர்

5


அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப்
பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென
அருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர்,
கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும்

10


கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!
விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை
நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது
வில்கெழு தடக்கை வெல்போர் வானவன்

15


மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத்
தொடியுடைத் தடமறுப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங் குரூஉக்கண் நெடுமதில்
சேண்விளங்கு சிறப்பின் - ஆமூர் எய்தினும்,
ஆண்டமைந்து உறையுநர் அல்லர், நின்
பூண்தாங்கு ஆகம் பொருந்துதன் மறந்தே.

21

160

ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?
நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம்
அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த

5


கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப்
பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன்
முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவுஉடை மையின் வள்பிற் காட்டி,

10


ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி
செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி
நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்,
பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப,
இரவந் தன்றால் திண்தேர்; கரவாது

15


ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்
அரவச் சீறூர் காணப்
பகல்வந் தன்றல், பாய்பரி சிறந்தே.

18

161

வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி
வடியாப் பித்தை வன்கண், ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி

5


எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொரள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோழ் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல்,

10


அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்குஎன உருத்த
நல்வரல் இளமுலை நனைய;
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே.

14

162

கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்கக்
கடிதுஇடி உருமொடு கதழுறை சிதறி

5


விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்,
பனிமயங்கு அசைவளி அலைப்பத், தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;
அறல்என அவிரும் கூந்தல் மலர்என

10


வாண்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்;
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்க்,
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசிக்,
கால்உறு தளிரின் நடுங்கி ஆனாது, .

15


நோய்அசா வீட முயங்கினன் - வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,

20


வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
நேர்கொள் நெடுவரை கவா அன்
சூரா மகளிரிற் பெறற்குஅரி யோளே.

25

163

விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி

5


விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால்

10


அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே!

14

164

கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன்

5


நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற'
வெறியேன் றன்றே வீகமழ் கானம்-
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம்

5


இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர்
மதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின்;
கந்துகால் ஒசிக்கும் யானை;
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே!

14

165

கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும்

5


நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணிஇழந்து அழுங்கின்று! தாயும்
'இன்தோள் தாராய், இறீஇயர்என் உயிர்! என,
கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்,
தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத்,

10


தாழிக் குவளை வாடுமலர் சூட்டித்,
'தருமணற் கிடந்த பாவைஎன்
அருமக ளே' என முயங்கினள் அழுமே!

13

166

'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
பல்நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்,
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப்,

5


பொறிவரி இனவண்டு ஊதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்,
புனைஇருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின், அணங்குக, என்!' என
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின்,

10


யார்கொல்- வாழி, தோழி !- நெருநல்
தார்பூண் களிற்றின் தலைப்புணை தழீஇ,
வதுவை ஈர்அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை, ஆடி யோரே?

15

167

வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு
வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளைப்

5


பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ்

10


முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று

15


ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால்நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே!

20

168

யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,
பனிவார் கண்ணேம் வைகுதும், இனியே:
ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப!
பல்ஆன் குன்றில் படுநிழல் சேர்ந்த
நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்-

5


கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து,
அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப,

10


ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண்
வாள்வரி வயப்புலி நன்முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்,
மான்அதர்ச் சிறுநெறி வருதல், நீயே?

14

169

மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப்,
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக்

5


கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
சுரம்பல கடந்த நம்வயின் படர்ந்து: நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து
செல்கதிர் மழுகிய புலம்புகொள் மாலை

10


மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயலுமிழ் நீரின் கண்பனி வாரப்,
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள் திருந்திழை தானே!

14

170

கானலும் கழறாது: கழியும் கூறாது:
தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது:
ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே:
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்:

5


தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு

10


கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!' எனவோ!

14

171

'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும்
அகன்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
பணைஎழில் அழிய வாடும்; நாளும்
நினைவல் மாதுஅவர் பண்பு' என்று ஓவாது
இனையல் - வாழி, தோழி ! புணர்வர் -

5


இலங்குகோல் ஆய்தொடி நெகிழப், பொருள்புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர்அடைந் திருந்த
மால்வரைச் சீறூர் மருள்பன் மாக்கள்
கோள்வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
திருத்திக் கொண்ட அம்பினர், நோன்சிலை

10


எருத்தத்து இரீஇ, இடந்தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற்சினைப்
பழம்போற் சேற்ற தீம்புழல் உணீஇய,
கருங்கோட்டு இருப்பை ஊரும்
பெருங்கை எண்கின் சுரன்இறந் தோரே!

15

172

வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்குவெள் அருவி
இன்இசை இமிழ்இயம் கடுப்ப, இம்மெனக்
கல்முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்புதலை மணந்த ஓங்குமலைச் சாரல்,

5


இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்திக், கோல்தெரிந்து,
வரிநுதல் யானை அருநிறத்து அழுத்தி,
இகல்இடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி,

10


முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின்
பிழிமகிழ் உவகையன், கிளையொடு கலிசிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்-

15


அணி இழை, உண்கண், ஆய்இதழ்க் குறுமகள்
மணிஏர் மாண்நலம் சிதையப்,
பொன்னேர் பசலை பாவின்று மன்னே!

18

173

'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறுநுதல்
மைஈர் ஓதி ! அரும்படர் உழத்தல்

5


சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர் - வாழி, தோழி !- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீஇ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ,

10


உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக்,
காடுகவின் அழிய உறைஇக், கோடை
நின்றுதின விளிந்த அம்புணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்குஉறழ் தோன்றல, பழங்குழித் தாஅம்

15


இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே.

18


'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' எனப்,
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை

5


நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்குஆ குவள் கொல் தானே - வேங்கை

10


ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள,
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் ஒதுக்கின், மாஅ யோளே?

14

174

வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் செவ்வாய் வாளி
ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின்,
பாறுகிளை பயிர்ந்து படுமுடை கவரும்

5


வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல்மாண்
தெரிவளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே - தோழி !-
கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன்

10


ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
வேலினும் பல்ஊழ் மின்னி, முரசு என
மாஇரு விசும்பிற் கடிஇடி பயிற்றி,
நேர்கதிர் நிறைத்த நேமியம் செல்வன்
போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல்

15


திருவில் தேஎத்துக் குலைஇ, உருகெழு
மண்பயம் பூப்பப் பாஅய்த்,
தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே!

18

175

கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்,
களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில்,
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை

5


முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப்,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல்

10


திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர்மலி மண்அளைச் செறியும் ஊர!
மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவுஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,

15


மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி?' எம்போல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய,

20


என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே.

26

176

'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும்
இன்னும் வாரார்: இனி எவன் செய்கு? எனப்,
பெரும்புலம் புறுதல் ஓம்புமதி - சிறுகண்
இரும்பிடித் தடக்கை மான, நெய்அருந்து
ஒருங்குபிணித்து இயன்ற நெறிகொள் ஐம்பால்

5


தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின்
கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடைப்,
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை

10


அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் - வென்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலைமருள் யானை மண்டுஅமர் ஒழித்த

15


கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.

20

177

வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்,
வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி
பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
நீலத் தன்ன அகல்இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி,

5


பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு,
யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தன்ன,
வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
அலங்குகுலை அலரி தீண்டித், தாது உக,

10


பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக்,
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து
கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின்தோட்
பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும்,

15


தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி -
எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' எனக்,
கனவிலும் பிரிவு அறியலனே: அதன்தலை

20


முன்தான் கண்ட ஞான்றினும்
பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே.

22

178

விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம்கால் மருங்கில்,
துனைஎரி பரந்த துன்அரும் வியன்காட்டுச்,
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது,

5


கான்புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர,
அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம்செல விரும்பினிர் ஆயின் - இன் நகை,

10


முருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்,
குவளை நாண்மலர் புரையும் உண்கண், இம்
மதிஏர் வாள்நுதல் புலம்ப,
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

14

179

நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,
கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை

5


அரும்புஅலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவுநாறு இருங்கழி துழைஇப் பலஉடன்

10


புள்இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
படப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
பொன்நேர் நுண்தாது நோக்கி,
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.

15

180

துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என்நிலை உரைமோ - நெஞ்சே!- ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ,

5


முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூரஆடி, மொசிந்து உடன்,

10


பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை,

15


நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச்

20


சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட் டதுவே - பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்,
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால், அரிவை இருந்த
மணம்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே. .

26

181

பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து,
வாங்கமை நோன்சிலை எருத்தத்து இரீஇ,
தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
வீளைஅம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட,

5


வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே!
அரவுஎறி உருமோடு ஒன்றிக் கால்வீழ்த்து
உரவுமழை பொழிந்த பானாட் கங்குல்,

10


தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும்,
பனியொடுகலுழும் இவள் கண்ணே: அதனால்,
கடும்பகல் வருதல் வேண்டும் - தெய்ய
அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க

15


கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சார லானே.

18

182

'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம்ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்றுசேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர், என்றி - தோழி !- பாடுஆன்று

5


பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு,
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே - மாலைக்

10


குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

15

183

கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிதுஆ கின்றால், சிறக்க, நின் ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு

5


சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட
வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித்,

10


தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர்எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்கச்,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்

15


செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர்த்
தார்மணி பலஉடன் இயம்ப-
சீர்மிகு குருசில்!- நீ வந்துநின் றதுவே.

19

184

எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை
நல்எழிற் பணைத்தோள் இருங்கவின் அழிய,
பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்: வாடல்

5


ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்

10


பெருவிழா விளக்கம் போலப், பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

13

185

வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
இருங்கயம் துளங்கக், கால்உறு தொறும்

5


பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே: நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட,

10


ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்

15


காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே: உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே.

20

186

தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச், சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் - கறுத்தோர் .

5


தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ - தோழி !- சேண்ஓங்கு

10


அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து

15


வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை

20


வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?

24

187

பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇப்,
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்

5


கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்,

10


தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே!

14

188

பசும்பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்புகண் அழிய, வேனில் நீடிக்,
கயம்கண் அற்ற கல்லோங்கு வைப்பின்
நாறுஉயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு
விழவுப்படர் மள்ளரின் முழவெடுத்து உயரிக்,

5


களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் 'கவாஅன்
வெவ்வரை அத்தம் சுட்டிப்' பையென,
வயல்அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்

10


படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ்
நன்ன ராளர் கூடுகொள் இன்னியம்
தேர்ஊர் தெருவில் ததும்பும்
ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே.

15

189

திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எற்பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே;
அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்;

5


அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!- உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒருநாள்,
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை

10


இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச்சுறா எறிந்தென: வலவன் அழிப்ப,
எழிற்பயம் குன்றிய சிறைஅழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழுமணல் அசைஇ,

15


ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே!

17

191

அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
எரிஇதழ் அலரியொடு இடைப்பட விரைஇ,
வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி,
தோல்புதை சிரற்றுஅடிக், கோலுடை உமணர்
ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி,

5


அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள்
திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர்
மடிவிடு வீளையொடு, கடிதுஎதிர் ஓடி,
ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள்இடை,

10


அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி
சென்று: வினை எண்ணுதி ஆயின், நன்று,
உரைத்திசின் வாழி - என் நெஞ்சே!- நிரைமுகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல்என விரிந்த உறல்இன் சாயல்

15


ஒலிஇருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?

17

192

மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
பொன்நேர் வண்ணம் கொண்டன்று: அன்னோ?
யாங்குஆ குவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்,
செவ்வாய்ச், சிறுகிளி சிதைய வாங்கி,

5


பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல்
வளைசிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
வந்து அளிக்குவை எனினே மால்வரை
மைபடு விடரகம் துழைஇ, ஒய்யென

10


அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி
பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்
இரவும் இழந்தனள்: அளியள்- உரவுப்பெயல்
உருமிறை கொண்ட உயர்சிமைப்
பெருமலை நாட - நின் மலர்ந்த மார்பே.

15

193

கானுயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில்லேர் உழவர்
பெருநாள் வேட்டம், கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்,
பொறித்த போலும் வால்நிற எருத்தின்:

5


அணிந்த போலும் செஞ்செவி, எருவை:
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்டி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும்

10


சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
பன்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
முருந்தேர் முறுவல், இளையோள்
பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.

14

194

பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறமாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
வித்திய மருங்கின் விதைபல நாறி,

5


இரலைநல் மானினம் பரந்தவை போலக்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறை சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட,

10


குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்

15


கார்மன் இதுவால் - தோழி !- 'போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை, நல்மான் கடைஇ
வருதும்' என்று, அவர் தெளித்த போழ்தே.

19

195

'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' எனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப: யானும்,

5


மான்பிணை நோக்கின் மடநல் லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பல்நாள்,
கூந்தல் வாரி: நுசுப்புஇவர்ந்து, ஓம்பிய
நலம்புனை உதவியோ உடையன் மன்னே:

10


அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல,
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி,
சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்;

15


மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயருமெம் கண்இனிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ?
தன்மனை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?

19

196

நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டுஆடி
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை, அமலைவெஞ் சோறு

5


தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்: குறுக வாரல் - தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய,

10


கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே!

13

197

மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூநெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் - வாழி; தோழி !- முனை எழ

5


முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்,
மறமிகு தானைக், கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்-
தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல்

10


மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு,
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதரப்,
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி,

15


ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்
வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர்ஆகி, நம் பிரிந்திசி னோரே.

18

198

'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது,
நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி,
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து,
கார்விரை கமழும் கூந்தல், தூவினை

5


நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல,
வண்டுவழிப் படரத், தண்மலர் மேய்ந்து,
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,

10


துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம்மா அரிவையோ அல்லள்: தெனாஅது
ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பிற்,
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்,

15


ஏர்மலர் நிறைசுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்- என் நெஞ்சே!

17

199

கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,
நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்

5


அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்:
வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய

10


கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
கடல்போற் கானம் பிற்படப், 'பிறர்போல்
செல்வேம்ஆயின், எம் செலவுநன்று' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,

15


நீ செலற்கு உரியை - நெஞ்சே!- வேய்போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம்பூண் நன்னன் பொருதுகத்து ஒழிய,

20


வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம்பெரிது பெறினும், வாரலென் யானே.

24

200

நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,
புலால்அம் சேரிப், புல்வேய் குரம்பை,
ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள்,

5


தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி
வந்தனை சென்மோ - வளைமேய் பரப்ப!-
பொம்மற் படுதிரை கம்மென உடைதரும்
மரன்ஓங்கு ஒருசிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற,

10


நல்தேர் பூட்டலும் உரியீர்: அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம்வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.-

14

201

அம்ம, வாழி - தோழி - பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,

5


தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே: அன்னையும்

10


பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர்- முனா அது
வான்புகு தலைய குன்றத்து கவாஅன்,

15


பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

19

202

வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்பப்,
புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்,
நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்

5


குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி,
சிறுபல் மின்மினி போலப், பலஉடன்
மணிநிற இரும்புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் - பானாள்,
உத்தி அரவின் பைத்தலை துமிய

10


உரஉரும் உட்குவரு நனந்தலைத்,
தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாகக்,
கனைஇருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே?

15

203

'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின்மகள்' எனப் பல்நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்குஉரைப்பு அறியேன்,

5


'நாணுவள் இவள்' என, நனிகரந்து உறையும்
யான்இவ் வறுமனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவணுறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' எனக், கழற்கால்
மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்,

10


பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன்வாய் யாக,
மான்அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்

15


செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனைகெழு பெண்டுயான் ஆகுக மன்னே!

18

204

உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,
கடல்போல் தானைக், கலிமா வழுதி
வென்றுஅமர் உழந்த வியன்பெரும் பாசறைச்
சென்றுவினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப்பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,

5


கணங்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே: வல்விரைந்து,
செல்க, பாக! நின் நல்வினை நெடுந்தேர்-
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை

10


பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல,
ஒண்தொடி மடந்தை தோள்இணை பெறவே.

14

205

'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்,
தையல்! நின்வயின் பிரியலம் யாம்' எனப்
பொய்வல் உள்ளமொடு புரிவுஉணக் கூறி,
துணிவில் கொள்கையர் ஆகி, இனியே

5


நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர
நாம்அழத் துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி,
நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி,

10


பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல-
மழைகால் அற்சிரத்து மாலிருள் நீக்கி,

15


நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்;
கடாஅ யானைக் கவுள்மருங்கு உதிர
ஆம்ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலிஉரி வரியதள் கடுப்பக், கலிசிறந்து,
நாட்பூ வேங்கை நறுமலர் உதிர,

20


மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறுநெறிக்
கல்பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.

24

206

என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்
பேடிப் பெண்கொண்டு! ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்,
சிறுதொழில் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத்

5


துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன
அம்மா மேனி, ஆயிழை, மகளிர்
ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடை குழைய,

10


முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
வதுவை மேவலன் ஆகலின், அதுபுலந்து
அடுபோர் வேளிர் வீரை முன்றுறை,
நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும் பெயற்கு உருகி யா அங்குத்
திருந்திழை நெகிழ்ந்தன, தடமென் தோளே!

16

207

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ளோர்த்துப்
படைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரம் பொறைய நரைப்புற கழுதைக்

5


குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின்,
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை,
மிஞிறுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள,
வெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல்
பிணரழி பெருங்கை புரண்ட கூவல்

10


தெண்கண் உவரிக் குறைக்குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்துப்,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ-
தேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மொழிமை கூறவும்,

15


மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே!

17208

யாம இரவின் நெடுங்கடை நின்று,
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,

5


அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், 'புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

10


ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்

15


குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி

20


நல்கினள், வாழியர், வந்தே- ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்நுண் ஓதி மாஅ யோளே!

24

209

'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த

5


ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி !- அவரரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், நிறைஇறந்து

10


உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி,

15


நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே.

17

210

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து,

5


நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,
தானிவண் வந்த காலை, நம்ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,
ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன்,

10


சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
'கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவுஅரிது என்னும்' என்பது
பலகேட் டனமால் - தோழி !- நாமே

14

211

கேளாய், எல்ல! தோழி - வாலிய
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்,
தண்மழை ஆலியின் தாஅய், உழவர்

5


வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்-
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்,

10


கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல்கெழுப் பனித்துறை,

15


நீர்ஒலித் தன்ன பேஎர்
அலர்நமக்கு ஒழிய, அழப்பிரிந் தோரே.

17

212

தாஇல் நன்பொன் தைஇய பாவை
விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன,
மிகுகவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
முளைஓ ரன்ன மின்எயிற்றுத் துவர் வாய்,

5


நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ்
இசைஓர்த் தன்ன இன்தீங் கிளவி,
அணங்குசால் அரிவையை நசைஇப், பெருங்களிற்று
இனம்படி நீரின் கலங்கிய பொழுதில்,
பெறலருங் குரையள் என்னாய், வைகலும்,

10


இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னுவசிபு
உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
படைநிலா இலங்கும் கடல்மருள் தானை

15


மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து,
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச்சென்று அழுந்தக்

20


கூர்மதன் அழியரோ- நெஞ்சே!- ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.

23

213

வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர்க்,
கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி
சுரிஇரும் பித்தை சுரும்புபடச் சூடி,

5


இகல்முனைத் தரீஇய ஏருடைப் பெருநிரை
நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்
வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற்கவின் இழந்த நீர்இல் நீள்இடை
அழலவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது

10


அகறல் ஆய்ந்தனர் ஆயினும், பகல்செலப்
பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப்
பெருமரம் கொன்ற கால்புகு வியன்புனத்து,
எரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை

15


வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப் பணைத்தோள்
பெருங்கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று, தாம் நீடலோ இலரே: என்றும்
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கை,

20


வலம்படு வென்றி வாய்வாள், சோழர்
இலங்குநீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறலென நெறிந்த கூந்தல்,
உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

24

214

அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்,
பகலுடன் கரந்த, பல்கதிர் வானம்
இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப்,
பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது,
வேந்தனும் வெம்பகை முரணி, ஏந்திலை,

5


விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை,
அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம்வயி னதுவே; நமர்என
நம்மறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்குஆ குவள்கொள் தானே -- ஓங்குவிடைப்

10


படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி
ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளஇப்,
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப,
ஆருயிர் அணங்கும் தெள்இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?

15

215

'விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறுபன் மொழிய தேஎம் முன்னி,
வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி,
செலல்மாண்பு உற்ற நும்வயின், வல்லே,

5


வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவது ஆயின், தொடுத்த
கைவிரல் கவ்வும் கல்லாக் காட்சிக்,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர்,

10


ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்,
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணிகொண்டு,
வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,

15


கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்திவண் உறைதல் ஆற்று வோர்க்கே.

17

216

நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-
தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப்

5


பெட்டாங்கு மொழிப' என்ப; அவ்வலர்
பட்டனம் ஆயின், இனியெவன் ஆகியர்;
கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
கடிமிளைப் புறவின் பூத்த முல்லையொடு,

10


பல்லிளங் கோசர் கண்ணி அயரும்
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறிசுரை வெள்வேல்
ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய
பெருங்களிற்று எவ்வம் போல
வருந்துப மாதுஅவர் சேரியாம் செலினே! .

16

217

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை,
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன,
துவலை தூவல் கழிய, அகல்வயல்
நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வரடையொடு துயல்வர,

5


பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல்உண் பச்சை நிறமறைத்து அடைச்சிய
'தோலெறி பாண்டிலின் வாலிய மலரக்
கோழிலை அவரைக் கொழுமுகை அவிழ,
ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட,

10


புலம்தொறும் குருகினம் நரலக் கல்லென
அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இதுவென,
எப்பொருள் பெறினும், பிரியன்மினோ, எனச்
செப்புவல் வாழியோ, துணையடை யீர்க்கே;

15


நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த
பாழ்படு மேனி நோக்கி நோய்பொர,
இணர்இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறுதீப் பிறப்பத் திருகி
நடுங்குதும் - பிரியின்யாம் கடும்பனி உழந்தே.

20

218

'கிளைபா ராட்டும் கடுநட வயக்களிறு
முளைதருபு ஊட்டி, வேண்டுகுளகு அருத்த,
வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉஉறைப் பல்துளி சிதறி, வான் நாவின்று,
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்

5


புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள்,
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல்,
தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதை
படாஅ வாகும், எம் கண் என, நீயும்
இருள்மயங்கு யாமத்து இயவுக்கெட விலங்கி,

10


வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது; என்னாய்,
வரவெளி தாக எண்ணுதி, அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
தண்ணிது கமழும்நின் மார்பு, ஒருநாள்

15


அடைய முயங்கேம் ஆயின், யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு.

20


ஒண்பூ வேங்கை கமழும்
தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே!

22

219

சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்,
'வாராயோ!' என்று ஏத்திப் பேர்இலைப்
பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல்
பால்பெய் வள்ளம் சால்கை பற்றி,

5


'என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டிப்,
'பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்,
நலம்புனைந்து எடுத்தஎன் பொலந்தொடிக் குறுமகள்
அறனி லாளனொடு இறந்தனள் இனி' என,

10


மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்-
பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர்உழை ஒருத்தல்;
பொரிஅரை விளவின் புன்புற விளைபுழல்,
அழல்எறி கோடை தூக்கலின், கோவலர்,

15


குழல்என நினையும் நீர்இல் நீள்இடை,
மடத்தகை மெலியச் சாஅய்,
நடக்கும் கொல்?" என, நோவல் யானே.

18

220

ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்,
தேரொடு மறுகியும், பணிமொழி பயிற்றியும்,
கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்,
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்

5


முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காண லாகா மாண் எழில் ஆகம்
உள்ளுதொறும் பனிக்கும் நெடுஞ்சினை, நீயே

10


நெடும்புற நிலையினை, வருந்தினை ஆயின்,
முழங்குகடல் ஓதம் காலைக் கொட்கும்,
பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும்புள் போல, நெஞ்சு அமர்ந்து,
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,

15


இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை
முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்
நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து
யாணர்த் தண்பணை உறும் எனக் கானல்
ஆயம் ஆய்ந்த சாய்இறைப் பணைத்தோள்

20


நல்எழில் சிதையா ஏமம்
சொல்லினித் தெய்ய, யாம் தெளியு மாறே.

22

221

நனைவிளை நறவின் தேறல் மாந்திப்,
புனைவினை நல்லில் தருமணல் குவைஇப்,
'பொம்மல் ஓதி எம்மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்-

5


மதிஉடம் பட்ட மைஅணற் காளை
வாங்குசினை மலிந்த திரளரை மராஅத்துத்
தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு, நின்
தண்நறு முச்சி புனைய, அவனொடு
கழைகவின் போகிய மழைஉயர் நனந்தலை,

10


களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை
காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும்பிடி இரியும் சோலை
அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.

14

222

வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
கான நாடன் இறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய்நலம் தொலைதலின், மொழிவென்;
முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்,
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்.

5


ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்,
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப்

10


படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ - வாழி, தோழி - பல்நாள்
உரவுரும் ஏறொடு மயங்கி,
இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.

15

223

'பிரிதல் வல்லியர்; இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர் கொல்?' என்று எண்ணி,
ஆழல் - வாழி, தோழி!- கேழல்
வளைமருப்பு உறழும் உளைநெடும் பெருங்காய்
நனைமுதிர் முருக்கின் சினைசேர் பொங்கல்,

5


காய்சினக் கடுவளி எடுத்தலின் வெங்காட்டு
அழல்பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழலில் ஓமை நீரில் நீளிடை,
இறந்தனர் ஆயினும், காதலர் நம்வயின்
மறந்து கண்படுதல் யாவது - புறம் தாழ்

10


அம்பணை நெடுந்தோள் தங்கித், தும்பி
அரியினம் கடுக்கும் சுரிவணர் ஐம்பால்
நுண்கேழ் அடங்க வாரிப் பையுள் கெட,
நன்முகை அதிரல் போதொடு குவளைத்
தண்நறுங் கமழ்தொடை வேய்ந்த, நின்
மண்ஆர் கூந்தல் மரீஇய துயிலே?

16

224

செல்க, பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்,
கொடுநுகத்து யாத்த தலைய, கடுநடைக்,
கால்கடுப்பு அன்ன கடுஞ்செலல் இவுளி,

5


பால்கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச்,
சாந்துபுலர் அகலம் மறுப்பக் காண்தகப்
புதுநலம் பெற்ற வெய்துநீங்கு புறவில்,

10


தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள்,
ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
திரிமரக் குரலிசைப் கடுப்ப, வரிமணல்
அலங்குகதிர் திகிரி ஆழி போழ,
வரும்கொல்- தோழி!- நம் இன்உயிர்த் துணைஎனச்,

15


சில்கோல் எல்வளை ஒடுக்கிப் பல்கால்
அருங்கடி வியனகர் நோக்கி,
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

18225

அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளைப்,
புதலிவர் ஆடுஅமைத் தும்பி குயின்ற

5


அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங்கு இனநிரைப் பின்றை, வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஐதுவந்து இசைக்கும்,
தேக்கமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து,
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல்,

10


பூத்த இருப்பைக் குழைபொதி குவிஇணர்
கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர,
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ- நெஞ்சே!- பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிருங் கூந்தல்,

15


செறிதொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?

17

226

உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
நாணிலை மன்ற- யாணர் ஊர!-
அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக்,
குறுந்தொடி, மகளிர் குரூஉப்புனல் முனையின்,
பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக்

5


கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஓப்பும்,
வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்,
பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை,
நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய்,
விடியல் வந்த பெருநீர்க் காவிரி,

10


தொடிஅணி முன்கை நீ வெய் யோளொடு
முன்நாள் ஆடிய கவ்வை இந்நாள்,
வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி,

15


போரடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

17

227

'நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என்ஆ குவள்கொல் இவள்?' எனப் பல்மாண்
நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
இனையல்- வாழி, தோழி!- நனை கவுள்

5


காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு
முன்னிலை பொறாஅது முரணிப், பொன்னிணர்ப்
புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப,
முதல்பாய்ந் திட்ட முழுவலி ஒருத்தல்
செந்நிலப் படுநீறு ஆடிச், செருமலைந்து,

10


களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பலஇறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய்இல ராக, நம் காதலர்!- வாய்வாள்,
தமிழ் அகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநாள் இருக்கை,

15


தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்.
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,

20


எல்லுமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!

22

228

பிரசப் பல்கிளை ஆர்ப்பக், கல்லென
வரைஇழி அருவிஆரம் தீண்டித்
தண்என நனைக்கும் நளிர்மலைச் சிலம்பில்,
கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
கல்முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப்,

5


பகலே இனிதுடன் கழிப்பி, இரவே
செல்வர் ஆயினும், நன்றுமன் தில்ல-
வான்கண் விரிந்த பகல்மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள்வீப்

10


புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
இரும்பிடி இரியும் சோலைப்
பெருங்கல் யாணர்த்தம் சிறுகுடி யானே.

13

229

பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
அகல்வாய் வானத்து ஆழ் போழ்ந்தென,
நீர்அற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவிஉகிர் மடப்பிடி
குளகுமறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன்

5


பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி,
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்இன்று ஆயினும் முடிக, வல்லெனப்,
பெருந்துனி மேவல்!- நல்கூர் குறுமகள்!-

10


நோய்மலிந்து உகுத்த நொசிவரல் சில்நீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்,
பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி
நல்மா மேனி தொலைதல் நோக்கி,
இனையல் என்றி; தோழி! சினைய

15


பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கின
போதவிழ் அலரி கொழுதித், தாது அருந்து
அம்தளிர் மா அத்து அலங்கல் மீமிசைச்,
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனிலும் வாரார்.
'இன்னே வருதும்' எனத்தெளித் தோரே.

21

230

'உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின் வைஎயிற்று,
மைஈர்ஓதி, வாள் நுதல் குறுமகள்!

5


விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு,
மனைபுறந் தருதி ஆயின், எனையதூஉம்,
இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ , மாத ராய்?' எனக்

5


கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர்
கைவல் பாகன் பையென இயக்க,
யாம்தற் குறுகினமாக ஏந்தெழில்
அரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
சிறிய இறைஞ்சினள், தலையே-
பெரிய எவ்வம் யாமிவண் உறவே!

16

231

'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல்லிருந்து அமைவோர்க்கு இல்' என்று எண்ணி,
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணைஇடத் தொலைந்தோர்,

5


படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்,
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக
வருவர் - வாழி; தோழி!- பொருவர்

10


செல்சமம் கடந்த செல்லா நல்லிசை,
விசும்பிவர் வெண்குடைப், பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின்
ஆடுவண்டு அரற்றும் முச்சித்
தோடுஆர் கூந்தல் மரீஇ யோரே.

15

232

காண்இனி- வாழி, தோழி!- பானாள்,
மழைமுழங்கு அரவம் கேட்ட, கழைதின்,
மாஅல் யானை புலிசெத்து வெரீஇ,
இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
பெருங்கல் நாடன் கேண்மை, இனியே,

5


குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்

10


ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ! அன்னை
கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
'முருகு' என வேலன் தரூஉம்
பருவ மாகப் பயந்தன்றால், நமக்கே!

15

233

அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்
அலர்முலை நனைய, அழாஅல்- தோழி!-
எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப்
பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென,
ஊனில் யானை உயங்கும் வேனில்,

5


மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்கு,

10


குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன்இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ,
பொருள்வயின் நீடலோ இலர் - நின்
இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே!

15

234

கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,
நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,
நிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப்
புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய

5


பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,
கால்என மருள, ஏறி, நூல்இயல்
கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்
வல்விரைந்து ஊர்மதி!- நல்வலம் பெறுந!
ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை

10


ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,
அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர்,

15


கழிபடர் உழந்த பனிவார் உண்கண்
நல்நிறம் பரந்த பசலையள்
மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே.

18

235

அம்ம- வாழி, தோழி!- பொருள் புரிந்து
உள்ளார் கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ?-
பயன்நிலம் குழைய வீசிப், பெயல் முனிந்து,
விண்டு முன்னிய கொண்டல் மாமழை

5


மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி
சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்
சுரிமுகிழ் முசுண்டைப் பொதிஅவிழ் வான்பூ
விசும்புஅணி மீனின் பசும்புல் அணியக்,

10


களவன் மண்அளைச் செறிய, அகல்வயல்
கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ
மாரிஅம் குருகின் ஈரிய குரங்க,
நனிகடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றிப்,
பனிகடி கொண்ட பண்பில் வாடை

15


மருளின் மாலையொடு அருள்இன்றி நலிய,
'நுதல்இறை கொண்ட அயல்அறி பசலையொடு
தொன்னலம் சிதையச் சாஅய்'
என்னள்கொல் அளியள்?' என்னா தோரே.

19

236

மணிமருள் மலர முள்ளி அமன்ற,
துணிநீர், இலஞ்சிக் கொண்ட பெருமீன்
அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
இடைனில நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டுப்

5


பனிபடு சாய்ப்புறம் பரிப்பக், கழனிக்
கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
உய்ர்த்தனென்- வாழி, தோழி!- அல்கல்

10


அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்பக்,
கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியா மையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்றுஇயல் எழில்நடைப் பொழிந்த மொய்ம்பின்,
தோட்டுஇருஞ் சுரியன் மணந்த பித்தை,

15


ஆட்டன் அத்தியை காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல்கொண் டன்று' எனப், 'புனல் ஒளித் தன்று' எனக்
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேதுபெரிது உறலே!

21

237

'புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து

5


இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின்- ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,

10


இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின்; உறந்தை எய்தினும்,
வினைபொரு ளாகத் தவிரலர்- கடைசிவந்து

15


ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!

17

238

மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்,
ஈன்றுஇளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தென,
மடமான் வல்சி தரீஇய, நடுநாள்,
இருள்முகைச் சிலம்பின், இரைவேட்டு எழுந்த
பணைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து,

5


மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்,
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி
இருங்கல் வியல்அறை சிவப்ப ஈர்க்கும்
பெருகல் நாட; பிரிதி ஆயின்,

10


மருந்தும் உடையையோ மற்றே- இரப்போர்க்கு
இழை அணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைசுரந் தன்ன ஈகை, வண்மகிழ்க்,
கழல்தொடித் தடக்கைக், கலிமான், நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து,

15


போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே?

18

239

அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!
மன்றும் தோன்றாது, மரனும் மாயும்-
'புலிஎன உலம்பும் செங்கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர்
எல்ஊர் எறிந்து, பல்ஆத் தழீஇய

5


விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறுபல் தேஅத்து ஆறுபல நீந்திப்
புள்ளித் தொய்யில், பொறிபடு சுணங்கின்,
ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம்இவண் ஒழிய,

10


ஈட்டுஅருங் குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? எனக்,
குறுநெடு புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம்பல மொழிந்த
சிறுநல் ஒருத்தி பெருநல் ஊரே!

15

240

செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை
மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப,
இனிப்புலம் பின்றே கானலும், நளிகடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்

5


பன்மீன் கூட்டம் என்னையர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக்,

10


கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து,
இன்துயில் அமர்ந்தனை ஆயின், வண்டுபட
விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப்,
பூவேய் புன்னை அம் தண்பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.

15

241

'துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன்- வாழி, தோழி!- உயர்மிசை

5


மூங்கில் இளமுளை திரங்கக், காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப, மழைமறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத்து ஓடி,
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை

10


புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கின் தாஅய்த், துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்
நல்மர மருங்கின் மலைஇறந் தோரே!

16242

அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஜை ஆடும் சோலைப்,
பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்,

5


செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், 'நுண்கேழ்
முறிபுரை எழில்நலத்து என்மகள் துயர்மருங்கு
அறிதல் வேண்டும்' எனப், பல்பிரப்பு இரீஇ
அறியா வேலற் றரீஇ, அன்னை

10


வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவை, சென்றுயாம்
செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை
நெகிழ்ந்த முன்கை, நேர்இறைப் பணைத்தோள்,
நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய,

15


முகிழ்த்து வரல் இளமுலை மூழ்கப், பல்ஊழ்
முயங்கல் இயைவன் மன்னோ-தோழி!-
நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்
பெருமலை விடரகம் நீடிய சிறுயிலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது

20


பிரசம் தூங்கும் சேண்சிமை,
வரையக வெற்பன் மணந்த மார்பே!

22

243

அவரை ஆய்மலர் உதிரத், துவரின்
வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப
இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றைக்
கறங்குநுண் துவலையின் ஊருழை அணியப்,
பெயல்நீர் புதுவரல் தவிரச், சினைநேர்பு

5


பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி
நெல்ஒலி பாசவல் துழைஇக், கல்லெனக்
கடிதுவந்து இறுத்த கண்இல், வாடை!
'நெடிதுவந் தனை' என நில்லாது ஏங்கிப்
பலபுலந்து உறையும் துணைஇல் வாழ்க்கை

10


நம்வலத்து அன்மை கூறி, அவர்நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனிவார் கண்ணேம் ஆகி, இனிஅது
நமக்கே எவ்வம் ஆகின்று;
அனைத்தால் தோழி! நம் தொல்வினைப் பயனே!

15

244

"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை

5


வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்

10


பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!

14

245

'உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்
நன்றுபுரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனைவலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின், நீங்கி
மழைபெயன் மறந்த கழைதிரங்கு இயவில்

5


செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர் தலைவர், எல்லுற,
வரிகிளர் பணைத்தோள், வயிறணி திதலை,
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பில்,
மகிழ்நொடை பெறாஅ ராகி, நனைகவுள்

10


கான யானை வெண்கோடு சுட்டி,
மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்
அருமுனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல்படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந் தன்ன அலங்குசினை ஒண்பூக்

1 5


குழல்இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய,
சென்மோ- நெஞ்சம்!- வாரலென் யானே.

21

246

பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
கதிர்மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலிநீர் அகல்வாய் யாணர் ஊர!
போதுஆர் கூந்தல் நீவெய் யோளொடு

5


தாதுஆர் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு
ஆடினை என்ப நெருநை; அலரே
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்,
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் .246-10

இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

14

247

மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர்- வாழி, தோழி!- பொருள்புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின்

5


பெருஞ்செம் புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகைபட
முனைபாழ் பட்ட ஆங்கண், ஆள்பார்த்துக்
கொலைவல் யானை சுரம்கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப்

10


படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்தின்,
பாறுகிளை சேக்கும் சேண்சிமைக்
கோடுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

13

248

நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்
வயநாய் எறிந்து, வன்பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கிக், கிளையொடு
நான்முலைப் பிணவல் சொலியக், கான் ஒழிந்து,
அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற

5


தறுகட் பன்றி நோக்கிக், கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது,
அருவழி விலக்கும்எம் பெருவிறல் போலும்' என,
எய்யாது பெயரும் குன்ற நாடன்

10


செறிஅரில் துடக்கலின், பரீஇப் புரிஅவிழ்ந்து,
ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை,
ஏற்றுஇமில் கயிற்றின், எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை;
வல்லே என்முகம் நோக்கி.
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந் தோளே!

16

249

அம்ம- வாழி, தோழி!- பல்நாள்
இவ்ஊர் அம்பல் எவனோ? வள்வார்
விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை
இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்
பொன்கோட்டுச் செறித்துப், பொலந்தார் பூட்டிச்,

5


சாந்தம் புதைத்த ஏந்துதுவங்கு எழிலிமில்
ஏறுமுந் துறுத்துச், சால்பதம் குவைஇ,
நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்பூண்
பல்வேல் முசுண்டை வேம்பி அன்னஎன்
நல்லெழில் இளநலம் தொலையினம், நல்கார்-

10


பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்,
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத், திற்றி தின்ற
புலவுக்களம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த

15


வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து,
வேறுவேறு கவலைய ஆறுபரிந்து, அலறி,
உழைமான் இனநிரை ஓடும்
கழைமாய் பிறங்கல் மலைஇறந் தோரே.

19

250

எவன்கொல்?- வாழி, தோழி!- மயங்குபிசிர்
மல்குதிரை உழந்த ஒல்குநிலைப் புன்னை
வண்டிமிர் இணர நுண்தாது வரிப்ப
மணம்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்,
கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்,

5


கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித்,
தாரன், கணணியன், சேரவந்து, ஒருவன்,
வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
அரும்படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய்

10


அவ்வலைப் பரதவர் கானல்ஞ் சிறுகுடி
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறைவளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்கு லானே!

14

No comments:

Post a Comment